அரசின் 5ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு இவ்வாரம் முதல் ஆரம்பம்!
கொரோனா தொற்றுக் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என என சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்..
முதற்கட்டமாக 21 லட்சம் குடும்பங்களுக்கு இந்நிவாரண நிதியை வழங்கும் நடவடிக்கை இவ்வாரம் முதல் முன்னெக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கல் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா பரவல் காரணமாக நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் முதலாம் அலை ஏற்பட்ட போது மூன்று மாத காலமாக நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தது. இதன் போது சுமார் 50 லட்சம் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இதேபோன்று இரண்டாம் அலையின் போது பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்ட 50 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 25 பில்லியன் நிதியும், கடந்த ஏப்ரல் மாதம் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட 30 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 12 பில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளன.
புதுவருட கொரோனா கொத்தணி தாக்கத்தினை தொடர்ந்து சமுர்த்தி பயனாளர்கள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட 60 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 30 பில்லியன் நிதி முதற்கட்டமாக ஒதுக்கிடப்பட்டது.
5,000 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் நாடுதழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. சுமார் 30 லட்சம் குடும்பங்களுக்கு இதுவரையில் 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
புதுவருட கொரோனாகொத்தணி பரவல் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் சமுர்த்தி பயனாளர்கள் தவிர்ந்த குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தரப்படுத்தலின் பிரகாரம் சுமார் 21 லட்சம் குடும்பங்கள் இந்நிதியை பெற தகுதி பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.