மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா
ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையிடலுக்குப் பின்னர் இந்த அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய நாடு என்ற வகையில் சிறிலங்கா பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உரையாற்றிய போது வழமை போலவே மனித உரிமை பேரவையின் விமர்சனங்களை நிராகரித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 ஆகிய தீர்மானங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்திருந்தது.
சிறிலங்கா பிரதிநிதி ஹிமாலி அருணதிலக ஆற்றிய உரையின் அடிப்படையில்,
துருவப்படுத்தும் முயற்சி
”குறித்த நடவடிக்கை பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டங்களுக்கு வழிவகுத்திருந்தது. அத்துடன், குறித்த தீர்மானங்களின் எழுத்து மூல அறிக்கைகளையும் அதன் முன்மொழிவுகளையும் நாம் நிராகரிக்கிறோம்.
இலங்கையின் உண்மையான நிலை குறித்த தீர்மானங்களில் பிரதிபலிக்கப்படவில்லை. இந்த தீர்மானங்களுக்கு ஆதரவாக சில நாடுகள் வாக்களித்திருந்த நிலையில் சில நிராகரித்திருந்தன.
ஏற்றுக்கொள்ள முடியாத சில காரணங்களை அடிப்படையாக கொண்டு குறித்த நாடுகள் மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டிருந்தன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 60/251 தீர்மானங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் அமைந்துள்ளன.
இந்த தீர்மானங்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் துருவப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. இந்த தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரவு செலவு திட்ட தாக்கங்கள் குறித்து பல நாடுகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
இலங்கை ஆதரவு அளிக்காது
இவ்வாறான விடயங்கள் பயனற்றவை என சிறிலங்கா அரசாங்கம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தன.
இதனடிப்படையில், இலங்கை குறித்த தீர்மானத்துக்கு ஆதரவளிக்காது. இதனை தவிர்த்த பேரவையின் ஏனைய பயனுள்ள செயல்பாடுகளுக்கு இலங்கை ஆதரவளிக்கும்.
மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் உறுதியான முன்னேற்றங்களை அடைய ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
உள்நாட்டு நிறுவனங்கள் ஊடாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். நல்லிணக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கம் குறித்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஒகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்
வடக்கு மற்றும் கிழக்கில் தொடரும் காணி பிரச்சனைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பிலும் அவர் கூறியிருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சர்வகட்சி மாநாடும் நடத்தப்பட்டிருந்தது.
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் நடைமுறை பாரிய உதவியாக அமைந்துள்ளது.
சுதந்திர உள்நாட்டு பொறிமுறை
சுதந்திர உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகத்தின் செயல்பாடுளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணகத்துக்கான பொறிமுறையின் தற்காலிக செயலகம் தற்போது நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் நாம் முன்வைத்த காரணங்களுக்கு சமமான அவதானம் செலுத்தப்படுமென நம்புகிறோம்.
உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் சர்வதேச கடப்பாடுகளுக்கு இணங்க இலங்கை தொடர்ந்து ஐநாவுடன் இணைந்து செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார்.