பொறுப்புக்கூறலே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : ஜெனிவா அமர்வில் வலுவான அறிக்கை
ஜெனிவாவில் இன்று ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 54 ஆவது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பது தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிடலும் அதுசார்ந்த கருத்துக்களும் வெளியிடப்பட்டிருந்தன.
இலங்கை குறித்த இன்றைய நிகழ்ச்சி நிரல் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றிருந்தன.
முதற்கட்டம் முற்பகலில் மனித உரிமை பேரவையின் உதவி ஆணையாளரின் அறிக்கையிடல் மற்றும் அறிக்கையை மையப்படுத்திய நாடுகளின் கருத்துக்களாக வெளிவந்திருந்தன.
இதன் பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் ஆரம்பித்த அமர்வில் இலங்கை குறித்து ஏனைய நாடுகளின் கருத்துகள் வந்திருந்தன.
இலங்கை தொடர்பான அறிக்கை
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நகர்வுகளில் ஏற்படவேண்டிய முன்னேற்றங்கள் குறித்த 15 பக்கங்களை கொண்ட அறிக்கை கடந்த 5 ஆந் திகதி மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க்கினால் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று அதனை மையப்படுத்திய வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மனித உரிமை பேரவை ஆணையாளரின் வோல்கர் டர்க் சார்பில் உதவி ஆணையாளர் நடா அல் நஸிப் வழங்கியிருந்தார்.
இந்த அறிக்கையில் உயிர்த்த தாக்குதல் குறித்த ஒரு சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என்ற செய்தி உட்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
அத்துடன், பொறுப்புக்கூறல் நகர்வுகளின் பலவீனம் காரணமாக இலங்கை ஒரு நல்ல வரலாற்று மாற்றத்தை பெறுவதற்கான இலக்கில் வெகு தொலைவில் உள்ளதாகவும் இந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை உதவி ஆணையாளர் நடா அல் நஸிப்பின் கூற்று
'போர் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும், அதில் பாதிக்கபட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் பரிகாரங்கள் கிட்டவில்லை.
இவற்றை தேடுவதில் அந்தமக்கள் தொடர்ந்தும் வலி மற்றும் வேதனையை அனுபவித்து வருவதான' செய்தியும் கூறப்பட்டிருந்தது.
உண்மையைத் தேடுவதாக காட்டிக்கொள்வது மட்டும் போதாது. மாறாக பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு மாற்றத்தை செயல்படுத்துவதற்கான அரசியல் விருப்பமும் இருக்க வேண்டுமென்ற இடித்துரைப்பும் இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் சட்டவிரோத கண்காணிப்புகள் தொடர்வதாக கவலைகளும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.