சர்வதேச கவனத்தில் இருந்து விலகும் முயற்சியில் சிறிலங்கா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நாளை ஆரம்பமாகும் 54 ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் கரிசனைகளை ஏற்படுத்தியுள்ள சட்ட விலக்களிப்பு குறித்த விடயங்கள் முக்கிய இடத்தைப் பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான நெருக்கடி குழுவின் மூத்த ஆலோசகர் அலன் கீனன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நாளை 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒரு மாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது.
தண்டனை விலக்களிப்பு குறித்த விடயதானங்கள்
இந்த கூட்டத்தொடரின்போது ஏற்கனவே இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51 இன் கீழ் 1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக ‘இலங்கைக்கு உண்மை தேவை, ஆனால் இன்னும் ஒரு உண்மை ஆணைக்குழு இல்லை’ என்ற தலைப்பில் இலங்கை தொடர்பான நெருக்கடி குழு புதிய பிரசுரத்தை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கையின் காரணமாக இலங்கையில் தண்டனை விலக்களிப்பு குறித்த விடயதானங்கள் இந்த முறை ஐ.நா அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் என இலங்கை தொடர்பான நெருக்கடி குழுவின் மூத்த ஆலோசகர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.
"பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, உள்நாட்டுப் போரின்போதும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் நடந்த அட்டூழியங்களைச் செய்தவர்களை பொறுப்புக்கூறும்படியும், விரோதங்களுக்கு வழிவகுத்த அடிப்படை நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக நாட்டைச் சிதைத்துள்ள தொடர் இரத்தக்களரி சம்பவங்களுக்கு அப்பால் நகர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு சர்வதேச மன்றம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையே எனவும் அலென் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பான விடயம் இல்லாது போகும் நிலை
எனினும் இந்தப் பிரச்சினைகளில் பேரவையின் வழமையான ஈடுபாட்டிற்கான அடிப்படையை புதுப்பிக்கும் தீர்மானத்திற்கு பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் ஆதரவளிக்காவிடின் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் இலங்கை தொடர்பான விடயம் இல்லாது போய்விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து வெளியேறுவதற்கு ஆர்வமாக உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம், தற்போதுள்ள தீர்மானமானது புதுப்பிக்கப்பட மாட்டாது என நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதாக உறுதியளிப்பதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக அலென் கீனன் கூறியுள்ளதுடன், தற்போதைய சூழ்நிலையில், அதன் வெற்றிக்கான வாய்ப்பு சிறிதும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை முடக்குவது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் உயர்தர அரசியல் கொலைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவமும் தொடர்ந்து தடுத்து வருகின்றனர் எனவும் அலென் கீனன் குறிப்பிட்டுள்ளார்.
45 வெளிநாட்டவர்கள் உட்பட 270 பேரின் உயிர்களை
காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்
தாக்குதல்கள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக
நம்பகமான அல்லது சுயாதீனமான விசாரணை எதுவும்
மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.