புலமைப்பரிசில் பரீட்சை இன்று!! பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இன்று(22) காலை 9.30 மணிக்கு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால், 8 மணிக்கு முன்னரே மாணவர்களை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்துச்செல்லுமாறு பிரதி பரீட்சைகள் ஆணையாளர் S.பிரணவதாசன் பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட் தொற்றுக் காரணமாக, பரீட்சைக்கு தேவையான உபகரணங்களை உரிய மாணவர்கள் வைத்திருக்க வேண்டுமெனவும், பிற மாணவர்களிடமிருந்து பெறுவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்டிருந்த புலமைப்பரிசில் பரீட்சை, முன்னர் குறித்த தினத்தின் படி இன்று நடைபெறவுள்ளது.
2021ஆம் ஆண்டில் குறித்த பரீட்சையை நடத்துவதற்கு திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்தது.
இதன்படி 2,943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமாக 85,445 மாணவர்களும், சிங்கள மொழி மூலமாக 2,55,062 மாணவர்களுமாக, மொத்தம் 3,40,507 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.