குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2,613 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் 2026 மார்ச் மாதமளவில் 1,110 பேருக்கு குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் விசேட பணிகளுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியெல்ல (Chamindrani Kiriella), எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பதவி வெற்றிடங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், “சுகாதாரத் துறைக்காக குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் கர்ப்பத்திற்கு முந்தைய பராமரிப்பு, கர்ப்பகால பராமரிப்பு மற்றும் பிரசவத்துக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகிய துறைகளில் தரமானதும், கருணையுடனும் கூடிய சேவைகளை வழங்கி வருகின்றனர்.
அத்துடன் தாய்சேய் சுகாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களையும் உள்ளடக்கியவாறு சுகாதார கல்வி வழங்குதல் போன்ற சேவைகளையும் வழங்குகிறார்கள்.
இன்றளவில் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. மத்திய அரசின் கீழுள்ள வைத்தியசாலைகளில் 430, மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் 2,183 என்ற அடிப்படையில் மொத்தமாக 2,613 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
நியமனங்கள் வழங்கப்படும்
குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குடும்ப சுகாதார உத்தியோகத்தர் பயிற்சிக் கல்லூரிகளில் 1,110 குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சிபெறுவதுடன், இவர்கள் 2026 மார்ச் மாதத்துக்குள் தமது பயிற்சிக் காலத்தை நிறைவு செய்யவுள்ளார்கள். பயிற்சியை நிறைவு செய்தவுடன் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும்.
அதேபோல் மேலும் 1000 பேர் கொண்ட குழுவொன்றை எதிர்காலத்தில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கு முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
2026 ஆம் ஆண்டுக்குள் கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குவதற்கும், விசேட பணிகளுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சீருடை கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 1 மணி நேரம் முன்
