வழமைக்கு திரும்பும் கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள்
புதிய இணைப்பு
இன்று (22) காலை பெய்த கனமழையால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செயற்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக, காலை கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த ஏழு விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக அதிகார சபை தெரிவித்திருந்தது.
பார்வைத் தெளிவையும், தரையிறங்கும் சூழலையும் பாதித்த கடும் மழைக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இந்தநிலையில் கட்டுநாயக்கவில் நிலைமைகள் மேம்பட்டுள்ளதாகவும், விமான நிலைய செயற்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மேலும் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மோசமான காலநிலை : கட்டுநாயக்கவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சில விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய, 05 விமானங்களை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திசை மாற்றி அனுப்பியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமித்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலையங்கள்
அத்துடன், 02 விமானங்கள் இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவானந்தபுரம் ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு திசை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டார், சாஜா, அபுதாபி, புதுடெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த விமானங்களே இவ்வாறு திசை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |