உலகில் 700 மில்லியன் பெண்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை : உலக வங்கி அறிவிப்பு
உலகம் முழுவதும் சுமார் 700 மில்லியன் பெண்கள் இன்னும் வங்கிச் சேவைகளைப் பெற முடியாமல் இருப்பதாக உலகளாவிய நிதிநிலை குறித்த உலக வங்கியின் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வின் படி, இவர்களுக்கு வங்கிக் கணக்குகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் நிகழ்நிலை பணச் சேவைகள் அணுக முடியாது உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பெண்களின் நிதி பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தல்
2021 இல் 66 வீதமாக இருந்த பெண்களின் கணக்கு வைத்திருக்கும் விகிதம், 2024 இல் 73 வீதமாக உயர்ந்துள்ளது. 2021 இல் 22 வீத பெண்கள் மட்டுமே வங்கிகளில் சேமித்து வந்த நிலையில், தற்போது அது 36 வீதமாக அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் மற்றும் பெறும் பெண்களின் எண்ணிக்கை 50 வீதத்திலிருந்து 58 வீதமாக உயர்ந்துள்ளது.

இலங்கை தொடர்பான பாலினத் தரவு அறிக்கையின்படி, இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் 80.2 வீதம் பேர் முறையான வங்கி கணக்கு அல்லது நிகழ்நிலை பணச் சேவைக் கணக்கைக் கொண்டுள்ளனர்.
இருப்பினும், 21.4 வீதமான பெண்கள் மட்டுமே வங்கி அல்லது நிகழ்நிலை கணக்குகள் மூலம் பணத்தைச் சேமிக்கின்றனர்.
மொத்தமாக 35.3 வீதமான பெண்கள் ஏதோ ஒரு வகையில் பணத்தைச் சேமிக்கின்றனர், ஆனால் மாதந்தோறும் முறையாகச் சேமிப்பவர்கள் 10 வீதம் மட்டுமே என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் மானியங்கள்
பெண்கள் வங்கி கணக்கு தொடங்குவதற்குத் தடையாக இருக்கும் முக்கியக் காரணிகளாக, கணக்கை ஆரம்பிப்பதற்கு தேவையான பணமின்மை, அதிகபடியான சேவைக் கட்டணங்கள், வங்கிகள் வசிக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பது, குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கையேச் சார்ந்திருப்பது போன்றன காணப்படுகின்றன.
உலகளவில் கணக்கு வைத்திருக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கைப்பேசிகள் அல்லது அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, அரசு வழங்கும் மானியங்கள் அல்லது முதலாளிகள் வழங்கும் ஊதியத்தைப் பெறுவதற்காகவே 60 வீத பெண்கள் தங்களின் முதல் வங்கிக் கணக்கைத் தொடங்கியுள்ளனர்.
டிஜிட்டல் கருவிகள் பாலின இடைவெளியைக் குறைக்க உதவினாலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான கடன் பெறுதல் மற்றும் சேமிப்பு பழக்கத்தில் இன்னும் பெரிய இடைவெளி நிலவுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 1 நாள் முன்