தலிபான்களுக்கு கடும் எதிர்ப்பு -700 பேர் கொன்று குவிப்பு - 600 பேர் உயிருடன் பிடிப்பு
ஆப்கானிஸ்தானின் பஞ்சசீர் மாகாணத்தைக் கைப்பற்ற தலிபான்கள் படுதீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் தலிபான்களை பஞ்சசீர் மாகாணத்துக்குள்ளேயே நுழையவிடாமல் வடக்கு படைகள் உக்கிர பதிலடி கொடுப்பதாகவும் 700 தலிபான்களை கொன்றுள்ளதாகவும் வடக்கு படை கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது வடக்கு படைகள். தலிபான்களுக்கு முன்னரே ஆயுதம் ஏந்திய வடக்கு படைகள், பஞ்சசீர் மாகாணத்தை தங்களது பிடியில் வைத்துள்ளனர். சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்தியவர் அகமது ஷா மசூத். சில ஆண்டுகளுக்கு முன்னர் தலிபான்களால் அகமது ஷா மசூத் கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது மகன் அகமத் மசூத், வடக்கு படைகளின் தலைவராக இருக்கிறார்.
காபூல் தலிபான்கள் வசமானது முதலே வடக்கு படைகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வடக்கு படைகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை தலிபான்கள் ஏற்கவில்லை.
இந்த நிலையில் பஞ்சசீர் மாகாணத்தை கைப்பற்ற தலிபான்கள் தீவிர யுத்தம் நடத்தி வருகின்றனர். பஞ்சசீர் தங்களது வசமாகிவிட்டது என தலிபான்கள் அடிக்கடி கூறி வருகின்றனர்.
ஆனால் வடக்கு படையினரோ, தலிபான்களை விரட்டி அடித்து வருகிறோம். பஞ்சசீர் மாகாணத்துக்குள் நுழைய முயன்ற தலிபான்கள் 700 பேரை சுட்டுக் கொன்றுள்ளோம். 600 பேரை பயணயக் கைதிகளாக பிடித்துள்ளோம் என்கின்றனர்.