தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து 71 விகாரைகள் - கனேடிய உயர்ஸ்தானிகரிடம் விவரண அறிக்கை கையளிப்பு
தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும், நீடித்து நிலைக்கக் கூடியதுமான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என கனேடிய பிரதமர் கொண்டு வந்த தீர்மானத்தையும் அவர் வரவேற்றுள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
71 விகாரைகள் குறித்த விவரண அறிக்கை

இதன்போது, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 71 விகாரைகள் குறித்த விவரண அறிக்கையும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால், கனேடிய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு, போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள 4374.8 ஏக்கர் காணிகள் தொடர்பான விவரங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.
