ஐ நா பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் சிறப்புரை ஆற்றவுள்ள ரணில்
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நியூயோர்க்கில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் இன்றைய தினம் (21) அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று இரவு அதிபர் உரை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக நேற்று (20) நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 2023 ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
வளப்பற்றாக்குறை
இந்த கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது,
“நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டாலும் பாரிய அளவிலான வளப்பற்றாக்குறை அதற்குத் தடையாக அமைந்துள்ளது" என்று கூறியிருந்தார்.
மேலும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தவிரவும் 12 வீத முன்னேற்றத்தை மாத்திரமே தற்போது காண முடிந்திருக்கிறது என்றும் ஏனைய முக்கியமான இலக்குகளில் 30 வீதத்தை இன்னும் அடைந்துகொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.நா தொடரில் கலந்துக்கொள்ள நியூயோர்க் சென்றுள்ள அதிபர் அங்கு பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.