ஐ.நாவின் அவசர காலநிலை நிகழ்ச்சி நிரல் : இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்த ரணில்
ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று (20) நடைபெற்ற அபிவிருத்திக்கு நிதியளித்தல் தொடர்பான மாநாட்டிலியே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகளாவிய கூட்டு விருப்பத்தின் மைல்கல்
புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை அடிப்படையாக கொண்டு, காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய உலக பொருளாதாரத்திற்கான நியாயமானதும் துரிதமானதுமான மாற்றத்திற்காக உலகளாவிய கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான மைல்கல்லாக ஐ.நா பொதுச்செயலாளரால் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
விரைவில் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய காலநிலை சார்ந்த செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாநாட்டில் பங்குபற்றிய இராஜதந்திர பிரதிநிதிகளின் முன்மொழிவுகளையும் பாராட்டினார்.
இலங்கையின் காலநிலை தழுவல் திட்டம்
காலநிலை சார்ந்த பிரச்சினைகளால் இலங்கைக்கு 2050 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% ஐ இழக்க நேரிடும் என நிபுணர்கள் கணித்துள்ளனதாகவும் இலங்கையின் காலநிலை தழுவல் திட்டத்திற்கு இரண்டு அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான மாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.