அதிகரிக்கும் மழையுடனான வானிலையால் 98 பேர் பாதிப்பு
காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழையினால் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினாலும், பலத்த காற்று காரணமாகவும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கு அமைவாக, காலியில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும், களுத்துறையில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இறப்புக்கள்
கன மழையினால் இதுவரையில், இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை, என்றாலும் களுத்துறை, பண்டாரகமவில் அதிக காற்று காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.