தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்...
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என வலியுறுத்திய தியாக தீபம் திலீபன் அவர்கள், ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும் உண்மையுடனும் நேர்மையுடனும் போராடுவதையே அதிகமும் விரும்பினார்.
இன இலட்சத்தியத்திலும் சமூக வாழ்விலும் தமிழச் சமூகம் விழிப்பும் அறிவும் கொண்டு எழுவதே தமிழர் தேசத்திற்கான அடிப்படை என்ற கனவைக் கொண்டிருந்தார் என்பதை அவரது உரைகளில் உணர முடிகின்றது. தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் துவங்கியுள்ளன.
தியாக தீபத்தின் நினைவுநாட்கள்
2009இற்கு முந்தைய காலத்தில் தியாக தீபத்தின் நினைவு நாட்கள் என்றால் ஈழம் அவரது நினைவுகளால் மூழ்கியிருக்கும். கடுமையான போர், அலைச்சல், பட்டினி வாழ்வு பிய்ந்துபோன குடிசை என்ற நிலைகளிலும் வீட்டின் முன்னால் திலீபன் அவர்களின் நினைவுப்படம் வைக்கப்பட்டு பூமாலை அணிவித்து தீபம் ஏற்றப்பட்டிருக்கும்.

ஈழத் தெருவெங்கும் திலீபனின் முகங்களால், சிவப்பு மஞ்சள் கொடிகளால் நிறைந்திருக்கும். 2009இற்குப் பின்னரான காலத்தில் தியாக தீபத்தின் நினைவுநாட்கள் புலம்பெயர் தேசங்களிலும் இணையங்களிலுமே அனுஷ்டிக்கப்படுவதுண்டு.
இப்போது ஈழ நிலத்தில் திலீபன் அவர்களின் உருவச் சிலை நிமிர்ந்திருக்கிறது. அவர் முன்னால் தீப ஒளிகளை இன்றைய தலைமுறையினர் ஏற்றுகின்றனர்.
சிங்களக் கலைஞர்
தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆவது நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபி எழுச்சிக் கோலம் பூணத் தொடங்கியுள்ளது. அங்கே சிங்கள இளைஞர்களும் மக்களும்கூட சென்று தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

சிங்கள மக்களும் சிங்களக் கலைஞர்களும் தியாக தீபம் திலீபனை பெருமதிப்போடு நினைவு கொள்வதுதான் தியாக தீபத்தின் மகத்துவமாகும். சிங்களத்திலும் தியாக தீபம் பற்றிய பாடல் பெருமையுடன் நினைவுகொண்டு பாடப்படுகிறது.
நம் எழுத்துக்களால், கவிதைகளால், பாடல்களால் நினைவுகூரப்படும் தியாக தீபத்தின் நினைவுநாளை, அவர் எந்த நிலத்திற்காக, எந்த நிலத்தின் சனங்களுக்காக துளி நீரும் அருந்தால் 12 நாட்கள் நோன்பிருந்து, உயிர் துறந்தாரோ, அந்த நிலத்தில், அந்த நிலத்தின் சனங்களால் அவரது நினைவுநாளைக் கொண்டாட முடியாதிருந்த ஒரு காலத்தை எதிர்கொண்டோம்.
சிங்களப் பேரினவாத அரசும் அதன் படைகளும் தியாக தீபத்தின் நினைவுத் தூபியையும், அவர் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுக் கல்லையும் சிதைத்து அழித்தது. ஆனாலும் எதனாலும் அழிக்க முடியாத திலீபனின் நினைவுகளையும் அவரது கனவையும் ஒருபோதும் அழித்துவிட முடியவில்லை.
உண்ணா நோன்பு
இணையத்தில் தியாக தீபம் போன்றவர்களின் நினைவுநாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்ற போது, ஈழ விடுதலை மறுப்பாளர்களும் சிங்கள அரசின் கைக்கூலிகளும் அதனை இணையப் போராளிகளின் இயலாமை என கிண்டல் செய்தனர்.

பலம் மிக்க நவீன ஊடகமான இணையத்தில் நினைகூரப்பட்ட தியாக தீபத்தின் நினைவுநாட்களை, இப்போது ஈழ நிலத்தில் எமது மக்கள் அனுஷ்டிக்கத் தொடங்கியுள்ளனர். அத்துடன் ஒருபடி கடந்து சிங்கள மக்களும் திலீபன் நினைவிடத்திற்கு வந்து செல்கின்றனர்.
2009 இனப்படுகொலைப் போரின் பின்னரான இன்றைய காலத்தில், நம்பிக்கையற்ற அரசியல் சூழல் நிலவும் இன்றைய காலத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர்வதும் அவரது கனவை நினைகூர்வதும் மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக உள்ளது.
இன்றைய காலத்தில், திலீபன் அவர்களை நினைகூருகின்றபோது இரண்டு விடயங்களை வலியுறுத்த வேண்டியுள்ளது, அல்லது பின்பற்ற வேண்டியுள்ளது. ஒன்று, தன்னலமற்ற அரசியல் எமக்கு அவசியமானது.
மற்றையது, திலீபனின் கனவை மெய்ப்பிப்பதுதான் அவருக்கு செய்யும் மெய்யான மரியாதை. அதுவே அவரை நினைவுகூர்வதற்கு அர்த்தமானதாயிருக்கும்.
2009ஆம் ஆண்டிற்குப் பின்னர், அதாவது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர், ஈழத் தமிழ் மக்கள் நம்பிக்கையற்ற, சூன்யமான அரசியல் சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். திலீபன் போன்ற போராளிகள் தன்னலமற்ற அரசியலால் ஈழப் போராட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினர், எடுத்துரைத்தனர்.
இனத்திற்கான அர்ப்பணிப்பு
தனிப்பட்ட இருப்புக்களின் மோதல் களமாகியுள்ள தமிழ் அரசியல் சூழலில் அறம் சாகடிக்கப்படுகிறது.

ஈழத் தமிழ் இனத்தின் அரசியல் போராட்டத்தை தமிழ் தலைமைகள் கையில் எடுத்து பதினாறு ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் துகள் துகளாய் சிதறி இருக்கிறோம்.
நேர்மையான அணுகுமுறை, உண்மையான பேச்சு, இனத்திற்கான அர்ப்பணிப்பு, ஒற்றுமைப்பட்ட குரல் என்று எதுவும் இல்லாமல் மாறிமாறி ஒருவரை ஒருவர் அழிக்கும் அரசியலில் ஈடுப்பட்டு ஈழத் தமிழ் மக்களை இப்போது தமிழ் அரசியல் சூழலே இனவழிப்பு செய்கிறது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
அந்தப் போராட்டத்தை ஒரு அசியல் போராட்டமாக, ஒரு அரசியல் இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. திலீபன் போன்ற உன்னதமான போராளிகள் சுமந்த கனவை, எடுத்து வந்த ஆயுதத்தை தொடர்ந்து ஏந்திச் செல்வதுதான் இன்றைய காலத்தின் அவசியமாகும்.
தன்னலமற்ற, ஆழமான புரிதல் கொண்ட, தமிழ் ஈழ நிலத்தின் ஆன்மாவை நேசிக்கும் இளைஞர்களும் அரசியல் தலைமைகளுமே எமக்கு அவசியமானவை.
திலீபன் போன்ற போராளிகளை நினைவுகூரும்போது, நம்மையும் நமது நிலத்தின் இன்றைய சூழலையும் குறித்து ஆழமாக சிந்திப்பது, அதன் நிமர்வுக்காய் நம் பங்களிப்பை செய்வது என்பனவே அவருக்குச் செய்யும் அஞ்சலியும் அவரை நினைவுகூர்வதன் அர்த்தமுமாக இருக்கும்.
தமிழ் மக்களின் கோரிக்கையை - அபிலாசையை ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வு, எமது மக்களை தொடர்ந்தும் அழித் தொழிக்கும் ஆயுதம் அல்லது யுத்தமாகும். அதுவே இப்போதும் நிகழ்கிறது.
எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் உரிமையைப் பறிக்காத, அவர்களை அழித்தொழிக்க முடியாத தீர்வொன்றே எமக்கு வேண்டும். அதற்காகவே திலீபன் போன்றவர்கள் கனவையும் பசியையும் சுமந்தார்கள்.
எமது மக்கள் எல்லா விடுதலையும், உரிமையும் கொண்ட சமத்துவ ஈழ மண்ணில் வாழ வேண்டும் என்பதுவே திலீபன் அவர்களின் கனவு.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் துவங்கும் இத் தருணத்தில் அவருக்கான மெய்யான அஞ்சலி குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். திலீபன்; எந்தக் காலத்திலும் அணையாத ஒளி. அந்த ஒளியிற்கு நாம் ஏற்றும் தீபம் உண்மையும் நேர்மையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 16 September, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.