வடுக்களை சுமந்து வந்த மாவீரரின் அன்னையை புறக்கணித்த சிறீதரன்!
கனகபுரம் மாவீரர் துயலும் இல்லத்தில் நேற்று(27) நடந்த மாவீரர் தின நிகழ்வுக்கு தன்னை சுடரேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அழைத்த நிலையில், இறுதியில் தான் சுடரேற்றாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக பூநகரியை சேர்ந்த மூன்று மாவீரர்களின் அன்னையொருவர் வெளியிட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்த விடயம், குறித்து கனகபுரம் மாவீரர் துயலும் இல்ல மாவீரர் நாள் ஏற்பாட்டுக்கு குழு உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளருமான விஜயகுமாரை ஐபிசி தமிழின் செய்திப்பிரிவு தொடர்புகொண்டு வினவியபோது, “குறித்த அன்னை சுடரேற்ற அழைக்கபட்ட விடயம் ஏற்பாட்டுக்குழுவுக்கு, தெரியாது எனவும் சுடரேற்றுவது உட்பட்ட அனைத்து ஒழுங்குகளையும் தமது தரப்பு ஏற்கனவே செய்திருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.
விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த போது மாவீரர்களின் அன்னையை ஒரு போதும் இவ்வாறு நடத்தியது கிடையாது என்ற அறச்சீற்றத்துடன் மூன்று மாவீரர்களின் தாயொருவர் மாவீரர்நாளுக்கு மறுநாளான இன்று வெளியிட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் தன்னை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மாவீராகி விட்ட தனது மூன்று பிள்ளைகளின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்ட பின்னர், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தன்னை பொதுச் சுடரேற்ற அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு தானும் சம்மதம் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் குறித்த அன்னை நேற்று(27) மாலை 5 மணிக்கு கனகபுரம் துயிலுமில்லத்திற்கு சென்றபோது அங்கு நின்றவர்கள் தங்களை ஏற்பாட்டுக்குழு எனத்தெரிவித்து விளக்கேற்றுவதற்கு தாங்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டதாக தெரிவித்து தன்னை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கவலை தெரிவித்தார்.
இந்தச்சம்பவம் தனக்கு மிகுந்த மன வேதனையை தருவதாகவும் முழங்கால் வரை வெள்ளத்தால் நிரம்பியுள்ள தனது வீட்டில் இருந்து ஒரு மைல்தூரத்துக்கு வெள்ளத்தால் கடந்து இன்னல்களுடன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்றபோதும் தான் இறுதியில் அவமதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் விடுதலைப்புலிகள் அமைப்பு ஒருபோதும் மாவீரரின் தாயை இவ்வாறு நடத்தியது கிடையாதெனவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து எமது செய்திப்பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தொடர்பு கொண்டு வினவியபோது, இந்த விடயம் குறித்து மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவிடம் வினவுமாறு அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, கனகபுரம் மாவீரர் துயலும் இல்ல ஏற்பாட்டுக்கு குழு உறுப்பினரான விஜயகுமாரை எமது செய்திப்பிரிவு தொடர்புகொண்டு இந்த விடயம் குறித்து வினவியிருந்தது.
குறித்த அன்னை சுடரேற்ற அழைக்கபட்ட விடயம் ஏற்பாட்டுக்குழுவுக்கு, தெரியாது எனவும் சுடரேற்றுவது உட்பட்ட அனைத்து ஒழுங்குகளையும் தமது ஏற்கனவே செய்திருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 November, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.