இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை, 2026 ஒக்டோபர் 13ஆம் திகதி சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.
இந்த விடயத்தை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தனது முகநுலில் பகிர்ந்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்த இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
சவூதி அரேபிய சட்டக் குழு
இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இலங்கைத் தூதுவருக்கும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும், இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டக் குழுக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறித்த அவர் தெரிவித்துள்ளார்.

அனோஜன் சிவராசா, சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸா பகுதியில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஜூலை மாதம் நபிகள் நாயகம் குறித்து முகநூலில் சர்ச்சைக்கிடமான கருத்து ஒன்றை வெளியிட்டதாகக் கூறி அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த சவூதி கீழ் நீதிமன்றம், அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவூதி ரியால்அபராதமும் விதித்தது.
எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட போது, சவூதி அரசுத் தரப்பு வழக்கை இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் கொண்டு சென்றது.
சவூதி உச்ச நீதிமன்றம்
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தான் செய்த தவறை உணர்ந்து, பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அதனை நீக்கிய அனோஜன், மன்னிப்புக் கோரும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
எனினும் மரண தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினரும், ஒட்டுமொத்த இலங்கையர்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிவிவகார அமைச்சு சவூதி அரேபிய அரசுடன் உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தது.
இந்த சட்டப் போராட்டத்தின் இறுதி முடிவாக, நேற்று அனோஜனின் மரண தண்டனையை சவூதி உச்ச நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டுள்ள அனோஜன் சிவராசாவை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை இலங்கை தூதரகம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |