ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச விளக்கமறியல் உத்தரவின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் சுகாதார நிலைமை தொடர்பான மருத்துவ குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கை இன்று (15) பிற்பகல் 04 மணியளவில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.
அந்த மருத்துவ குழுவில் 14 வைத்தியர்கள் உள்ளடங்குவதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
ஷிரந்தி ராஜபக்சவின் இருதயம் தொடர்பான நோய்கள் மற்றும் அது தொடர்பான சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவே குறித்த குழு நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

10 மில்லியன் ரூபாய் அரச பணத்தை குற்றவியல் ரீதியாக பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நாளை (16) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கு நேற்று முன்தினம்(13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருதய நோய் நிலைமை காரணமாக ஷிரந்தி ராஜபக்சவிற்கு அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாதென அவரது சட்டத்தரணி நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.
இதேவேளை, ஷிரந்தி ராஜபக்ச நாளை (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |