ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி: முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு முக்கிய பதவி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பமாகியுள்ளது.
கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க செயற்படுவதோடு, தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் தொடக்க விழா கொழும்பில் (Colombo) இன்று புதன்கிழமை (09) இடம்பெற்றுள்ளது. இக் கட்சிக்கு “ஐக்கிய ஜனநாயகக் குரல்” (UDV)என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது மைக் சின்னத்தில், நடைபெறவுள்ள தேர்தலில் களம் இறங்கவுள்ளது.
மக்களின் குரல்
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க,‘‘எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது. ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும் ,போட்டியிடவும் முடியும்.
இந்தக் கட்சியில் தமிழர்கள், மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும் இருக்கின்றனர். இது மக்களின் குரலாக இருக்கும். இது நாள் வரை, அரசியல் வாதிகள் பேச பொது மக்கள் கேட்டார்கள்.
இனி பொது மக்கள் பேசட்டும் அரசியல்வாதிகள் அதனை புரிந்துகொள்ளவேண்டும். பேச முடியாமல் இருக்கும் மக்கள் இனி பேசலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்
மேலும், 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அவர் வழங்கியுள்ளார். இதில் ஊழல் அற்ற ஆட்சி, லஞ்ச ஒழிப்பு, தரமான மருத்துவ வசதி, வாழ்கைச் செலவை குறைப்பது என்பது போன்ற மிக முக்கியமான பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் வேட்பாளர்களாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |