இளம் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்ற டி.ஜே விருந்து - 7 பேர் போதைப் பொருளுடன் கைது!
இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட 200 பேர், அனுராதபுரம் தஹியாகம பிரதேசத்தில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்ற டி.ஜே. விருந்தில் பங்கேற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த விருந்தில், பங்கேற்றிருந்தவர்களில் 7 பேரை போதைப்பொருட்களுடன் அனுராதபுரம் பிராந்திய குற்றப் பணியகம் கைது செய்துள்ளது.
இணையத்தளம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் நாடாளுமன்ற உறுப்பினரே கலந்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 4 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும், நாக்கின் கீழ் வைக்கும் போதை முத்திரை, 4 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் போதை மாத்திரைகள், கேரள கஞ்சா ஆகியவற்றை கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரத்திற்கு அமைய நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து சென்ற 20 வயது முதல் 35 வயதுக்குட்பட 200க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் விருந்தில் கலந்துகொண்டுள்ளனர்.
விருந்தில் கலந்துகொள்ளும் ஒரு நபருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. உள்ளே சென்றதும் பணம் செலுத்தியவர்களை அடையாளம் காண அவர்களின் கைகளில் மஞ்சள் பட்டி கட்டப்பட்டுள்ளது.
விருந்துக்கு சென்ற பின்னர், அங்கிருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களிடம் இருந்து போதை மாத்திரை, போதை முத்திரை, கஞ்சா உட்பட போதைப் பொருட்களை பணம் கொடுத்து வாங்க முடியும் என்பது காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விருந்தில் கலந்துகொண்ட பலர் போதைப் பொருளை பயன்படுத்தி இருந்ததை அவதானிக்க முடிந்தது என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மருத்துவர் ஆகியோர் விருந்துக்கு அழைப்பாளர்களாக கலந்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
