மற்றுமொரு வெற்றிகர சத்திர சிகிச்சை - பெண்ணின் வயிற்றிலிருந்து பத்து கிலோ கட்டி அகற்றம்
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து சுமார் பத்து கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சுரங்க உபேசேகர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் வைத்தியர் சமந்த சமரவிக்ரம தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சத்திரசிகிச்சையில் கருப்பை வாயில் இருந்து இந்தக் கட்டியை அகற்றியுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதி
கடந்த வியாழக்கிழமை 49 வயதுடைய பெண் தம்மைப் பார்க்க வந்ததாக சத்திரசிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
வயிற்றில் ஒரு அளவு பாரமாக உள்ளதுடன் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கருப்பையில் கட்டி
உடனடியாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தேவையான ஸ்கான் பரிசோதனைகளை மேற்கொண்ட போது, கருப்பையில் கட்டி இருப்பது தெரியவந்ததையடுத்து, ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் (19) ஆம் திகதி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நோயாளி நலமுடன் இருப்பதாக விசேட வைத்தியர் சமந்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் கடந்த ஜூன் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது, ஒருவருக்கு சிறுநீரகத்திற்கு அருகில் ஏற்பட்டிருந்த மிக நீளமானதும் மிகப்பெரியதுமான கல்லை அகற்றி வைத்தியர்கள் குழுவொன்று கின்னஸ் உலக சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.