'கின்னஸ்' உலக சாதனை படைத்த இலங்கை வைத்தியர்கள்
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் கடந்த ஜூன் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது, ஒருவருக்கு சிறுநீரகத்திற்கு அருகில் ஏற்பட்டிருந்த மிக நீளமானதும் மிகப்பெரியதுமான கல்லை அகற்றி வைத்தியர்கள் குழுவொன்று கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைமைத்துவ மருத்துவ நிபுணர் மற்றும் வைத்தியர் கே.சுதர்ஷனின் தலைமையில் கப்டன் வைத்தியர் W.P.S.C பத்திரத்ன மற்றும் வைத்தியர் தமன்ஷா பிரேமதிலக உள்ளிட்ட வைத்திய குழாம் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளது.
இதுவே உலகளாவிய ரீதியில் சிறுநீரகத்தில் ஏற்பட்டிருந்த மிக விசாலமான கல் என்பதனால், அதனை அகற்றியமை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதியப்பட்டதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டது.
கின்னஸ் உலக சாதனை
இராணுவ மருத்துவர்களால் அகற்றப்பட்ட இந்த சிறுநீரகக்கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது.
கடந்த கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக்கல் 13 சென்றிமீற்றர் அளவில் 2004 இல் இந்தியாவிலும், அதிக நிறையான 620 கிராம் சிறுநீரகக்கல் 2008 இல் பாகிஸ்தானிலும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது.
வைத்தியர் கே.சுதர்ஷன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.