இந்தியப்படையினரிடம் கெஞ்சிக் கதறிய தமிழ் பெண்
தமிழ் மக்களின் கலாச்சாரச் சூழலைப் பொறுத்தவரையில், வன்புணர்வு என்பது தீவிர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.
எந்த ஒரு பெண்ணினதும் வாழ்க்கையில், அல்லது எந்த ஒரு குடும்பத்தினதும் சரித்திரத்தில் என்றுமே நடந்துவிடக்கூடாத ஒரு சம்பவமாகவே இந்தப் வன்புணர்வு என்ற விடயம் நோக்கப்பட்டுவருகின்றது.
வன்புணர்வு என்கின்ற இந்த கொடூரத்திற்கு உள்ளாகும் ஒரு பெண்ணுக்கும், அவரது கணவன் அல்லது பெற்றார் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளுக்கும் மனரீதியாக அதிர்ச்சி தரும் ஒரு விடயமாகவே இது இருந்துவிடுகின்றது.
நமது சமூகத்தில், ஒரு இளம் பெண்ணுடைய கன்னித்தன்மை – அவளுடைய விருப்பத்திற்கு எதிராகத்தான் என்றாலும் – அழிக்கப்பட்டு விடுமேயானால் அவள் திருமணம் செய்வதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.
ஒருவேளை அவள் திருமணமானவளாக இருந்தால், அவள் சமூகத்தால் விலக்கி ஒதுக்கப்படுவதற்கு நிறையவே சந்தர்ப்பம் உள்ளது.
(ஆனால் தற்பொழுது நிலமை சற்று முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என்பதையும் இங்கு கூறித்தான் ஆகவேண்டும். வெவ்வேறு நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் எம்மவர்கள் புலம்பெயர ஆரம்பித்ததைத் தொடர்ந்து நிறைய மாற்றங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன.
‘கலாச்சாரம் என்கின்ற போர்வையில் ஒரு வரம்பிற்கு மீறி எமது சமூகத்தில் இருந்துவந்த பாரம்பரிய அடக்குமுறைகளை எமது இளைஞர்கள் படிப்படியாக உடைத்தெறிய ஆரம்பித்து வருகின்றார்கள்.
ஒரு பெண்ணிண் விருப்பதை மீறி அவளது உடலுக்கு ஏற்பட்ட பாதிப்பை, வெறும் ‘காய்ச்சல், ‘தடிமன் போன்ற ஒரு சிறு நோயாகவே நினைத்து மறந்துவிடும் உயரிய பண்பை அவர்கள் தற்பொழுது கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.) ஆனால் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முந்திய அந்தக் காலகட்டத்தில் நிலமை அவ்வளவு சுமுகமானதாக இருக்கவில்லை.
வன்புணர்வுவிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் பலர் அவர்களது குடும்பங்களினாலும், சமூகத்தினாலும் புறந்தள்ளி வைக்கப்படும் ஒரு அபாயச் சூழ்நிலை காணப்படவே செய்தது. பாலியல்வதைக்கு உட்பட்டவர், மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினர் போன்றோருக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பு மிகவும் பாரதூரமானதாகவே இருந்தது.
ஆரம்பத்தில் சில மணி நேரமாகவோ அல்லது ஓரிரு நாட்களாகவோ பாதிக்கப்பட்டவர் பேச முடியாமல் பிரம்பை பிடித்தவர் போன்று காணப்படுவார். தொண்டை அடைத்த நிலையில் பேச முடியாமல் திணறுவார். படிப்படியாக பிறரிடம் இருந்து ஒதுங்க ஆரம்பிப்பார். மிகவும் மௌனமாக நடமாட ஆரம்பிப்பார். நிறைய அழுவார். அவற்றுடன் அதிக மனச் சோர்வு ஆரம்பித்துவிடும்.
சாதாரணமாகவே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிரந்தரமான ஒரு வடுவை ஏற்படுத்துவதாக கருதப்படுவதால், சமூக வாழ்க்கை ஓட்டத்தில் அவரால் வழமை போலவே மீண்டும் பங்குபற்றமுடியாமல் போய்விடும்.
கர்ப்பம்??
இதுபோன்ற கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், சமுதாயப் பயம் என்பனவற்றிற்கு அப்பால், அவர்களை மற்றொரு பயமும் பிடுத்துவிடுகின்றது.
அதுதான் தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் தான் கர்ப்பம் தரித்துவிடுவோமோ என்கின்ற பயம். தனக்கு இட்பெற்ற கொடுமையின் விழைவு கர்ப்பம் தரித்தல் என்கின்ற இயற்கையின் மூலம் தொடர்ந்துவிடுமோ என்கின்ற பயம் அந்தப் பெண்ணையும், அவள் சார்ந்த குடும்பத்தையும் அதிகமாகப் பீடித்துக் கொள்கின்றது.
இதுகூட அவர்களுக்கு வேறு பல பிரச்சினைகளைக் கொண்டு வந்தது. கர்ப்பமாயுள்ளாரா என்று பரிசோதிப்பதற்கு, அல்லது ஒருவேளை கர்ப்பமடைந்தால் அதனைக் கலைத்துவிடுவதற்கு என்று வைத்தியரை அல்லது வைத்தியம் தெரிந்த ஒருவரை நாடுவதை பலர் அதிமுக்கியமாக் கருதி செயற்படுவார்கள்.
இதுகூட நடைமுறையில் அவர்களுக்கு பல பிரதிகூலங்களைப் பெற்றுத் தரக்கூடியதாகவே அமைந்திருக்கும்.
அலைக்கழித்த அதிகாரிகள்
இந்தியப் படையினரின் பாலியல் வன்முறைகள் என்ற கொடுமைக்கு தண்டணை பெற்றுக் கொடுப்பது அத்தனை இலகுவானதொன்றல்ல என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்: இந்தச் சம்பவம் 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.
அவளுக்கு 22 வயது. மாணவி. அவளுடைய தந்தை பாதி கண் தெரியாதவர். குடும்பம் முழுவதும் சிலாபத்தில் கடைவைத்திருக்கும் அவளது அண்ணனிலேயே தங்கியிருந்தது.
அவளது தாய் 24.01.1988 முதல் கோயில் பிராத்தனை ஒன்றில் ஈடுபட்டிருந்ததால் தினமும் அவள் தாயிற்கு உணவு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். கோயில் அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு மிகவும் அருகிலேயே அமைந்திருந்தது.
விரதம் முடிப்பதற்காக நள்ளிரவே அவ்வாறு உணவு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். சம்பவ தினம், அதாவது 29ம் திகதி அந்த மாணவி தனது தந்தையுடன் கோயிலுக்கு உணவு எடுத்துச் சென்றுகொண்டிருந்தாள். வழியில் நான்கு இந்திய இராணுவத்தினர் தந்தையிடமும், மகளிடமும் அடையாள அட்டையை கேட்டார்கள் அவளை நீண்ட நேரமாகச் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தினார்கள்.
தற்பொழுது நேரம் என்ன? எதற்காகத் தனியே சென்றுகொண்டிருக்கின்றீர்கள்? என்றெல்லாம் கேட்டபடி சோதனை செய்திருக்கின்றார்கள். தகப்பனை அங்கு உட்காரச் சொன்ன அவர்கள் அந்தப் பெண்ணை மாத்திரம் கோயிலுக்கு எதிரே இருந்த ஒழுங்கையை நோக்கி நடக்கும்படி உத்தரவிட்டார்கள்.
ஆபத்தான நிலையைப் புரிந்துகொண்ட அவள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் தனியாக மேலும் நடக்கும்படி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டாள்.
ஒரு இராணுவ வீரன் துப்பாக்கியை நீட்டியபடி அவளது தந்தையின் அருகில் சென்று நின்றுகொண்டான். மற்றைய மூவரும் அவளை அந்த ஒழுங்கை வழியாக அழைத்துக்கொண்டு சென்றார்கள். தான் ஏதாவது முரண்டு பிடித்தால் தனது தந்தையையும், தன்னையும் சுட்டுத் தெருவில் போட்டுவிட்டு, தங்கள் இருவரையும் மறுநாள் புலிகள் என்று அடையாளப்படுத்த அந்தப் பாதகர்கள் தயங்கமாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.
ஒருவருமில்லாத ஒரு குடிசையை அணமித்ததும், அருகிலிருந்த ஒரு புதருக்குள் அவளை இழுத்துச் சென்று அவளைக் கீழே கிடத்தினார்கள். ஒருவன் காவலுக்கு நிற்க மற்றய இருவரும் அவளைக் குதறினார்கள். பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டார்கள். மறுநாள் இயலாத தனது தந்தையையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த இந்தியப்படை இராணுவ முகாமிற்குப் போய் தனக்கு இடம்பெற்ற அநீதி பற்றி முறையிட்டாள்.
பெரிய முகாமிற்குப் போய் முறையிடும்படி அங்கு கூறப்பட்டது. பெரிய முகாமிற்குச் சென்று முறையிட்டார்கள். அடையாள அணிவகுப்பு நடாத்தி சம்பந்தப்பட்ட நான்கு படை வீரர்களும் அடையாளம் காண்பிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கும் முகமாக, அவளை ஒரு மருத்துமனையில் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டது.
இந்த இழுபறியில் களைப்படைந்த அவர்கள் அத்துடன் அந்த விடயத்தை விட்டுவிட்டார்கள். அனேகமான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுவது குறைவு. ஒருவேளை அவர்கள் உயரதிகாரிகளிடம் முறையிடும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் கூட, அவர்களை முறையீடுசெய்தவர்களை அலைக்கழித்து களைப்படைய வைத்துவிடுவார்கள்.
கற்பு
காலங்காலமாகவே ‘கற்பு என்பது தமிழ் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் உன்னத உயர் பண்பாகவும் உயிரைப் போலவே கவனத்துடன் காக்கப்படவேண்டி ஒன்றாகவுமே கருதப்பட்டு வருகின்றது. ஈழப்பெண்கள் வாழ்விலும் இந்த விடயம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
ஈழத்தில் இந்தியப் படையினர் வன்புணர்வுகள் புரிந்த காலப்பகுதிகளில், அவர்களிடம் இரையாகிப்போன எத்தனையோ பெண்கள் தங்கள் உயிரை மாய்த்து தம்மீது ஏற்படுத்தப்பட்ட களங்கத்தைப் போக்கிக்கொண்ட வரைலாறு காணப்படுகின்றது. தமிழ் மக்களின் கலாச்சார மரபுப்படி, இந்தியப் படைகளினால் சீரழிக்கப்பட்ட எத்தனையோ பெண்கள் இன்றுவரை திருமணம் முடித்துக்கொள்ளாமல், தங்களைத்தாங்களே நொந்துகொண்டிருப்பதையும் இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்தியப் படையினரிடம் ஒரு இளம் பெண் தன்னை விடுவிக்கும்படி கெஞ்சி கதறியது பற்றி அதனை நேரில் கண்ட ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தார். “துப்பாக்கி முனையில் மூன்று இந்திய இராணுவவீரர்கள் ஒரு இளம் பெண்ணை பலத்காரம் செய்ய முயன்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அவள் கெஞ்சி மன்றாடிய ஒலி இப்பொழுதும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. ‘அண்ணே என்னைச் சுட்டுக் கொண்றுவிடுங்கள்.
ஆனால் இதை மட்டும் செய்துவிடாதீர்கள் என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள். அதிஷ்டவசமாக ஒரு இராணுவ அதிகாரிக்கு அவள் மீது இரக்கம் ஏற்பட்டுவிட்டது. எட்டி அவளை ஒரு அறை அறைந்துவிட்டு அவளைப் போக அனுமதித்தார்- இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அலைக்கழிப்பு
இந்தியப் படையினர் ஈழத்தில் தமிழ் பெண்கள் மீது மேற்கொண்ட வன்முறைகள் தொடர்பாக உலகத்தின் கவனம் பெருமளவில் ஈர்க்கப்படவில்லை என்றாலும், உலகத்தின் மத்தியிலும், தமிழ் நாட்டின் மத்தியிலும் இந்தியாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் பாலியல் வன்முறைகள் தொடர்பான செய்திகள் பெருமளவில் பரவ ஆரம்பித்திருந்தன.
அவசர அவசரமாக இந்த வன்முறைக் கலாச்சாரத்தை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டவரவேண்டும், அல்லது இந்த விடயங்கள் பற்றிய செய்திகள் வெளிவருவது தடுக்கப்படவேண்டும் என்ற உத்தரவு இந்தியப் படையின் உயர் தலைமையால் விடுக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை ஏற்கும் மனநிலையில் களமுனை அதிகாரிகள் இருக்கவில்லை. எதிரி யார்? எங்கிருக்கின்றான்? எப்பொழுது தம்மீது தாக்குதல் நடத்துவான் என்று அறியாமல் ஒரு வித்தியாசமான கொரில்லா யுத்தத்தை ஈழமண்ணிவ் எதிர்கொண்டு வரும் ஜவான்களை ஒரு அளவிற்கு மேல் கட்டுப்படுத்துவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது களமுனையில் உள்ள இந்தியப் படை அதிகாரிகளின் கருத்தாக இருந்தது.
பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இந்திய உயரதிகாரிகளிடம் துணிந்து முறையிட்டவர்களை அலைக்கழித்து அல்லது சோர்வடைய வைத்து தமது ஜவான்களின் நடத்தைகளை நியாயப்படுத்திய மேலதிகாரிகளும் இருக்கவே செய்தார்கள். ஒரு மாணவி மீது இந்தியப் படையினர் பாலியல் வல்லுறவு மேற்கொண்டதற்கு எதிராக அருகில் உள்ள முகாமில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முகாமில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் குற்றவாளிகள் அந்த மாணவியால் சரியாக அடையாளம் காண்பிக்கப்பட்டார்கள். “சரி, நாளை வாருங்கள்|| என்று கூறி மாணவியையும் பெற்றோரையும் இந்திய இராணுவத்தினர் அனுப்பிவிட்டார்கள். தனது தாய் தந்தையுடன் அந்த மாணவி மறுநாள் அந்த முகாமிற்குச் சென்றாள்.
“பெரிய முகாமிலுள்ள உயரதிகாரிகளைச் சென்று சந்தியுங்கள்|| என்று கூறி அவர்களை அரியாலை இராணுவ முகாமிற்கு இராணுவ ட்ரக் வண்டியொன்றில் ஏற்றி அனுப்பிவைத்தார்கள். அரியாலை இராணுவ முகாமிற்குச் சென்ற அவர்களை எந்த உயரதிகாரியும் வந்து சந்திக்கவில்லை. முழு நாழும் அவர்கள் அங்கு காத்திருந்ததுதான் மிச்சம். இரவு நெருங்க ஆரம்பித்ததும் அவர்களை அச்சம், கோபம் என்பன பீடிக்க ஆரம்பித்தன. இரவுச் சாப்பாட்டை அவர்கள் வேண்டாம் என்று கூறி ஒதுக்கிவிட்டார்கள்.
நடு ராத்திரியில் ஒரு சிப்பாய் அவர்களிடம் வந்து கமாண்டர் அந்தப் பெண்ணை மாத்திரம் தனியே பார்க்க விரும்புவதாகக் கூறி அழைத்திருக்கின்றான். கோபமுற்ற தாய் மகளுடன் சேர்ந்து குரலெழுப்பியிருக்கின்றாள். உடனே வாயில் கையை வைத்து “உஷ்..|| என்று கூறியபடி அந்தச் சிப்பாய் வெளியே போய்விட்டான்.
இதைவிட பலமான அச்சுறுத்தல் வரலாம் என்று பயந்த தாய் அன்று இரவு முழுவதும் அந்த அறையில் வாசலிலேயே காவல் இருந்திருக்கின்றாள். மறுநாள் காலை வீட்டுக்குத் திரும்பிச் செல்ல இருந்தவர்களிடம், தொடர்ந்து அங்கு காத்திருக்கும்படி கூறப்பட்டது. காத்திருப்பதில் எந்தவிதப் பிரயோசனமும் இல்லை என்பதுடன், தொடர்ந்து அங்கு தங்கியிருப்பது மேலும் மோசமான அனுபவத்தையே பெற்றுத்தரும் என்பதையும் புரிந்துகொண்ட அந்த மாணவி, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவளை வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றாள்.
உடனே அவரை இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருந்ததால், தகப்பனை முகாமில் விட்டுவிட்டு தாயையும், மகளையும் வெளியில் செல்வதற்கு அனுமதித்தார்கள். தாயை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு மகளை மீண்டும் முகாமில் ஆஜராகும்படி கூறப்பட்டது.
கடைசியில் அந்த மகளும் தன்னை வைத்தியசாலையில் அனுமதித்துக்கொள்ளவேண்டி ஏற்பட்டது.
அடி உதை..
கிராமங்களில் பரவலாக இடம்பெற்றுவந்த பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு கிராம மட்டத்தில் இயங்கிவந்த மக்கள் பிரதிநிதிகள் உதவவேண்டும் என்று இந்திய இராணுவ உயரதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள்.
இதனடிப்படையில், நவம்பர் 18ம் திகதி ஒரு முறைப்பாட்டை மக்கள் பிரதிநிதிகள் குழு(Citizen committee – பிரஜைகள் குழு) ஒரு இந்திய இராணுவ முகாமில் முறையிட்டது.
அந்த முகாம் பொறுப்பதிகாரி மிகவும் சுறுசுறுப்பாகச் செயற்பட்டார். அடையாள அணிவகுப்பை உடனடியாக நடாத்தி சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்களை அடையாளம் கண்டு கொண்டார். அதேவேளை, மக்கள் பிரதிநிதிகள் குழுவில் சென்ற துடிப்பான ஒரு இளம் வயதினன் பற்றிய விபரங்களையும் அந்தப் பொறுப்பதிகாரி சாதாரணமாகக் கேட்டு வைத்துக்கொண்டார்.
ஒரு சில நாட்களின் பின்னர் அந்த இளைஞன் வசித்துவந்த வீட்டிற்கு அருகில் ஒரு சுற்றிவளைப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகித்த அந்த இளைஞனை சந்தேகத்தில் பெயரில் கைது செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். இரண்டு நாட்கள் முகாமில் வைத்து நல்ல அடி. உதடு கிழிந்து, தலை உடைந்த நிலையில் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
முகாமில் விசாரணைகளில் போது அவரிடம் கேட்கப்பட்ட பிரதான கேள்வி இதுதான்: புலிகள் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகளை ஏன் இந்தியப் படையினர் செய்ததாகக் கூறுகின்றீர்கள்..?-என்று கேட்டுத்தான் இந்தியப் படையினர் அந்த மக்கள் பிரதிநிதிகள் குழு இளைஞனை அடித்திருக்கின்றார்கள்.
நியாயப்படுத்தும் அதிகாரிகள்
இந்திய ஜவான்கள் ஈழத்தில் மேற்கொண்ட வரையறையற்ற பாலியல் வல்லுறவுகள், இந்தியப் படைகளின் தலைமையினால் ஒரு வகையில் அங்கீகரிக்கப்பட்டிருந்ததுதான் பெரிய கொடுமை.
யுத்தத்தில் ஈடுபட்டுவரும் படையினர் தமது களைப்பை போக்கிக்கொள்ள அவ்வாறு செய்வது ஒரு வகையில் நியாயமே என்பதுதான் அவர்களது வாதம். ஆனால் ஈழத்தின் தமிழ் பெண்களின் நியாயமோ வேறாக இருந்தது.
எமது உடல் எமக்குரியது, உங்களுடைய களைப்பைத் தீர்ப்பதற்கு இது உரியதொன்றல்ல என்பதே அவர்களின் வாதமாக இருந்தது.
அந்த வாதம் நீதியாகவும் ஒலித்தது. தமிழ்நாட்டு வீரர்கள்? இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயம் பற்றி சில வரிகள் கூறியேயாகவேண்டும். இந்தியப்படையினர் ஈழத்தில் மேற்கொண்ட பாலியல் கொடுரங்கள் விடயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப்படை வீரர்களின் பங்கு என்ன என்பது பற்றி இந்தத் தொடரில் நிச்சயம் நாம் பதிவுசெய்தேயாகவேண்டும்.
தொடரும்..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |