தவறான நடவடிக்கைகளுக்காக விற்கப்படும் சிறுமிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்
கண்டி (Kandy) - வெலம்பொடை பிரதேசத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமிகளை தவறான நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்ததாக கூறப்படும் கண்காணிப்பாளரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மடாட்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியொருவர் காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் பிரகாரம் முறைப்பாடு செய்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் குறித்த சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
மருத்துவ அறிக்கை
இந்நிலையில், கண்காணிப்பாளரால் சிறுமிகள் பல்வேறு நபர்களுக்கு விற்கப்படுவதாகவும் மேலும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் உள்ள மருத்துவ அறையில் தவறான நடவடிக்கைகளுக்கான வசதிகளை வழங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், மடாட்டுகம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி முறைப்பாடு செய்த சிறுமியின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக அவரை அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வெலம்படை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |