யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் பொறியியலாளர் பலி! வெளியான மேலதிக தகவல்கள்
யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் சனிக்கிழமை (22) நள்ளிரவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இளம் பொறியியலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த குறித்த பொறியியலாளர் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும் - வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கோகுலதாஸ் (கோபு) என்ற 32 வயதான இளம் பொறியியலாளரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் உயிரிழந்த பொறியியலாளர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நல்லூர்ப் பகுதியில் வைத்து எதிரே வந்த காருடன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், காரைச் செலுத்தி வந்தவரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பொறியியலாளரான கோகுலதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று (23) உயிரிழந்த நிலையில் ஏனைய இருவரும் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த பொறியியலாளரின் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலை
இதேவேளை கிளிநொச்சி - பளைப் பகுதியில் நேற்று முன்தினம் (23) சனிக்கிழமை மாலை நிகழ்ந்த விபத்தில் 18 வயதான இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞரின் மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் பளையில் வசித்து வந்த, வடமராட்சி வடக்கு, அல்வாய் நக்கீரன் பகுதியைச் சேர்ந்த 18 வயதான பிரதீபன் சகீன் என்ற இளைஞரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8