விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம் : சரத் பொன்சேகா பகிரங்கம்
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் கைதுசெய்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியிருக்கும் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், அவர் தன்மானப் பிடிவாதத்துடன் அதனை நிராகரித்து இறுதிவரை போரிட்டு உயிரிழக்கத் தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
காலியில் சனிக்கிழமை (21) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இராணுவத்தினர் பின்வாங்கிய சம்பவம்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாம் 32 ஆண்டுகள் யுத்தம் செய்தோம். அந்த யுத்தத்தை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களிடமோ அல்லது இராணுவத் தளபதிகளிடமோ சரியான யுத்தத் தொலைநோக்குப் பார்வை இருந்ததாக நான் நம்பவில்லை.
எமது இராணுவத்தில் திறமையான தளபதிகள் பலர் இருந்தனர். ஸ்ரீலால் வீரதுங்க, டென்சில் கொப்பேகடுவ, ஜானக பெரேரா உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகள் யுத்த அனுபவமும் திறமையும் கொண்டவர்களாக விளங்கினர்.

அவர்களில் பலரும் இந்த யுத்தத்தை இராணுவ ரீதியாக மாத்திரம் வெற்றிகொள்ள முடியாது என்றும், இதற்கு அரசியல் தீர்வொன்றும் அவசியம் என்றும் ஊடகங்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர். அந்தக் காலப்பகுதியில் மக்களிடமும் இதே கருத்து காணப்பட்டது.
இராணுவத்தினர் தாக்குதல்களை எதிர்கொண்டு பின்வாங்கிச் சென்ற சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனையிறவில் சுமார் 12,000 இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் தாக்குதல் நடத்தி அந்தப் பகுதியைக் கைப்பற்றியதையடுத்து இராணுவத்தினர் பின்வாங்கிய சம்பவமும் இடம்பெற்றது.
இத்தகைய சம்பவங்களின் காரணமாக, இந்த யுத்தத்தை ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என்றும், இதற்கு அரசியல் தீர்வே அவசியம் என்றும் மக்கள் நம்பினர்.
அரசியல் தீர்வு என்பது பிரபாகரனுக்கு ஏற்ற வகையிலான தீர்வொன்றை வழங்குவதாகவே சிலர் கருதினர். ஆனால், நாம் யுத்தத்தை முன்னெடுத்த விதம் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு
யுத்த வெற்றி
யுத்தத்தை முன்னெடுப்பதற்காக அழகான பெயர்களைச் சூட்டுவதோ, விளம்பரப்படுத்துவதோ, நாடகமாடுவதோ எமது நோக்கமாக இருக்கவில்லை. எதிரிகள் எங்காவது சுற்றிவளைக்கப்பட்டால் அவர்களை மீட்பதற்காகப் பெயரிடப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து அதனைப் பெரிதுபடுத்தும் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபடவில்லை.
முழு வடக்கு, கிழக்கு யுத்தப் பிரதேசத்தையும் எனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு, அந்தப் பிரதேசம் முழுவதையும் வெற்றிகொள்ளக்கூடிய திட்டமொன்றை உருவாக்கினேன். அந்தத் திட்டமே இறுதியில் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது. அதன் மூலம் யுத்த வெற்றியை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

யுத்தத்தின் போது இராணுவத்தினருக்கு எதிராகப் பல்வேறு தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. சுமார் 10 கிலோமீற்றர் அளவிலான பிரதேசத்துக்குள் எதிரிகள் மற்றும் அவர்களது தலைவர்கள் அனைவரும் சுற்றிவளைக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டின் தலைவர் இரண்டு நாட்களுக்கு யுத்த நிறுத்தமொன்றை அறிவிக்கத் தீர்மானித்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்காகவே இந்த யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. அப்போது மக்கள் யுத்தம் முடிவடையும் வரையில் காத்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பாற்சோறு உண்ணலாம் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருந்தனர். அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இரண்டு நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்
2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியளவில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் சுமார் 400 மீற்றர் × 400 மீற்றர் அளவிலான குறுகிய பிரதேசத்துக்குள் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் சரணடைவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்கள் சரணடைந்தால் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், பிரபாகரன் அந்த யோசனைக்கு இணங்கவில்லை. அவர் தனக்கென ஒரு தன்மானப் பிடிவாதத்தைக் கொண்டிருந்தார். சரணடைந்து உயிர் வாழ்வதைவிட இறுதிவரை போரிட்டு உயிரிழப்பதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் இருந்ததனால்தான் சரணடைவதற்கான யோசனையை நிராகரித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அனைவரும் முற்றாக அழிக்கப்படும் வரையில் மேலும் 24 மணித்தியாலங்கள் காத்திருக்க முடியுமா என்ற நிலைமையும் அப்போது காணப்பட்டது.
அவர்களை உயிருடன் கைதுசெய்து, அவர்களது உயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் நாட்டின் தலைவர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அவர்களது சகோதரர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அவர்களை உயிருடன் கைதுசெய்திருந்தால், இன்றைய நிலைமையில் வடக்கில் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பமாகியிருக்கும். ஏனெனில், அவர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்து, பிள்ளையான், கருணா ஆகியோரைப் பராமரித்து அரவணைத்ததைப் போன்று அவர்களையும் அரவணைத்திருப்பார்கள். அதன் மூலம் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப்பட்டிருக்கும்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |