ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் 623 குழந்தைகள் பலி..! ஈரான் பெண்கள் நல அமைச்சர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர்களின்போது 623 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் பிரதிப் பிரதிநிதி ஸஹ்ரா பெஹ்ரூஸ்-அஸார் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று (22.11.2026) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், உயிரிழந்த சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தற்காப்புப் போர்களின்போது உயிரிழந்த சிறுவர்களின் இழப்பு ஈரானுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த சிறுவர்கள்
"அண்மைய திணிக்கப்பட்ட போர்களின்போது எமது சிறுவர்களுக்கு நேர்ந்தது மிகவும் வேதனையானது.

ஈரானின் எதிர்கால நம்பிக்கையாகத் திகழ்ந்த 623 சிறுவர்களை நாம் இழந்துள்ளோம்.
மேலும், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு மேலதிகமாகப் பெருமளவிலான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
மினாப் பகுதியில் உள்ள ஷஜரே தய்யிபே மற்றும் ரஹ்பூயான் பாடசாலைகளில் பல சிறுவர்கள் உயிர் துறந்தார்கள்.
அத்துடன், 12 நாள் போர், ஜனவரி மாதச் சம்பவங்கள் மற்றும் 40 நாள் போர் ஆகியவற்றின்போது லாமெர்ட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் உயிரிழந்தார்கள்.
இதற்கிடையில், போர்களின் நேரடித் தாக்கங்களைத் தாண்டி, பொருளாதாரத் தடைகள் மற்றும் மேலதிக நிதி நெருக்கடிகளும் சிறுவர்களைப் பாதிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, அரிய மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு விசேட மருந்துகளில் தங்கியிருக்கும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.
பட்டாம்பூச்சி நோய் என அழைக்கப்படும் எபிடெர்மோலிசிஸ் புல்லோசா (EB) மற்றும் இரத்தக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் பொருளாதாரத் தடைகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்நாட்டு மருந்து உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |