வடக்கிலுள்ள சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கான தங்குமிடம்...!
வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகளை நேர்த்தியாக செய்து கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று (27-01-2026) மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விடுதிகளைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புனரமைப்புப் பணி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “போர் முடிவடைந்த பின்னர் நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவத நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோன்று இப்போதும், வடக்கு மாகாண சபையின் நிதியில் மேற்கொள்ளப்பட்ட இப்புனரமைப்புப் பணிகளுக்கு பல ஒத்துழைப்புகள் கிடைத்துள்ளன.

இப்பணிகள் உரிய காலத்தில் முடிக்கப்பட்டுள்ளதுடன், ஆறு மில்லியன் ரூபா வரையிலான அரச நிதி சேமிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள்
வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாங்குளம் ஆதார மருத்துவமனையின் மருத்துவர் விடுதி, தாதியர் விடுதி, துணை மருத்துவ ஆளணியினர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் முதற்கட்டமாக முழுமையாகப் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி, நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் மற்றும் சாரதி விடுதி என்பன இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டன.

இதில் தாதியர் விடுதியானது எட்டு அறைகள், சமையலறை மற்றும் உணவு அருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



