மக்களின் பயன்பாட்டுக் காணிகளை மதஸ்தாபனத்திற்காக கையகப்படுத்தும் முயற்சி!
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கோவில் மோட்டை பகுதியில் அமைந்துள்ள அரச காணிகள் மதஸ்தாபனத்திற்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனையடுத்து, பாரம்பரியமாக அரச காணியில் காடுகளை துப்பரவு செய்து குளம் அமைத்து விவசாய செய்கைகளை மேற்கொண்டு வந்த மக்கள், அக்காணிகளை மதஸ்தாபனம் ஒன்றுக்கு வழங்க முடிவு மேற்கொள்ளப்பட்டதை கண்டித்து இன்று காலை 9.00 மணி தொடக்கம் மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில், கடந்த முப்பது வருடங்களாக கோவில் மோட்டை பகுதியில் விவசாய செய்கைகளை மேற்கொள்ளும் 27 குடும்பங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டு தமது நிலங்களை தமக்கே வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அக்கிராம மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற நிலையில் கோவில் மோட்டை பகுதியில் விவசாய செய்கைகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த காணிகளை பிறிதொரு உரிமையாளருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமேல் கருத்து தெரிவிக்கையில், காணி தொடர்பான பிணக்கு பலவருடங்களாக நீடித்த நிலையில் அண்மையில் தன்னுடைய தலைமையில் மக்களின் ஆலோசனையின் பின்னர் அவர்களின் முன்மொழிவின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.
எனவே மக்களின் குழப்ப நிலை காரணமாக கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி உயர் மட்ட முடிவுக்காக அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.








