மகிந்த அரசாங்கத்தின் முன்னாள் எம்.பிக்கு எதிராக சி.ஐ.டியில் முறைபாடு
முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே, 2008ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்த அரச உத்தியோகபூர்வ இல்லத்திற்கான வாடகை, நீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் எதனையும் செலுத்தவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
அரசியல் நடவடிக்கைகளுக்காக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வந்த முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன (பொஹொட்டுவ) கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே குறித்த இந்த குற்றச்சாட்டை நேற்று (04.08.2026) நாடாளுமன்றத்தில் அருண் ஹேமச்சந்திரா முன்வைத்தார்.
இந்த நிலுவைத் தொகைகளை மீளப் பெறுவதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், இதுவரை எந்தவொரு தொகையும் செலுத்தப்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திருட்டு, மோசடி மற்றும் ஊழல்கள்
இதனால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் (CID), அரச கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவிற்கும் (COPE) ஒப்படைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினராக இருந்த பிரியந்த பத்திரண பிரேமகுமார என்பவருக்கும் பேதுருகொட்டுவ பகுதியில் அரச உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான வாடகை எதுவும் செலுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் திருட்டு, மோசடி மற்றும் ஊழல்களுக்கு இடமளித்து அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்ற முயன்ற போதிலும் அரசியல் அதிகாரம் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |