கண்ணுக்கு தெரியாத பயங்கரவாதம்: தெளிவுப்படுத்தும் காவல்துறை
க்ளீன் சிறிலங்கா (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைந்து காவல்துறையினர் மேற்கொண்ட போக்குவரத்து நடவடிக்கைகள் காரணமாக, வாகன விபத்துகளால் ஏற்படும் தினசரி உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து விபத்துகளால் தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை, போரின் போது இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் அதன்போது பதில் காவல்துறை மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம்
இது கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் என்றும், வீதி ஒழுங்குமுறைகளை பேணுவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்திய நாட்களில் வீதி விபத்துக்களில் தினமும் சுமார் 9 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், தற்போது அது 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சில நாட்களில் இது 2 ஆக கூட குறைந்துள்ளதாகவும் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து நடவடிக்கை
மேலும், போரின் போது தினமும் 4-5 பேர் வரையிலேயே உயிரிழந்ததாகவும் வீதி விபத்துகளால் தினமும் 10-15 பேர் நிரந்தரமாக ஊனமடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறனதொரு பின்னணியில், காவல்துறையினரால் தொடங்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் காரணமாக, டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று எந்தவொரு போக்குவரத்து விபத்துகளும் பதிவாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |