நிவாரணம் வழங்குவது நீதிக்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை அல்ல! ஆளுநர் எடுத்துரைப்பு
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணத்துடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நிவாரணம் வழங்குவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையாக அமையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்கள்
இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக தமது உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை முழுமையாக உணர்வதாகக் குறிப்பிட்ட ஆளுநர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் வெளிப்பாடாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஒரு குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கக்கூடிய நிலையில், உண்மையைத் தேடும் விசாரணைகளுடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை, நீதி, நிவாரணம், கண்ணியம் மற்றும் மீள்நிகழாமை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்விடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10