சீனாவிற்கு வைக்கப்படும் கடிவாளம் : அமெரிக்க பின்னணியில் கொழும்பில் காலூன்றுகிறார் அதானி
இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான கவுதம் அதானி கொழும்பில் துறைமுக முனைய திட்டத்தை செயல்படுத்த உள்ளார். இந்த திட்டத்தில் அமெரிக்க அரசு நிறுவனம் 553 மில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அதானி கொழும்பு துறைமுக முனைய திட்டத்தை செயல்படுத்த உள்ளமை இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் வகையில் அமையும் என இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்கா ஆசியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடு
அதானி குழுமத்தின் இந்த திட்டத்தில் அமெரிக்க அரசு நிறுவனமான சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் US International Development Finance Corporation (DFC) முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
அதன்படி அதானி குழும திட்டத்தில் அமெரிக்காவின் DFC நிறுவனம் 553 மில்லியன் டொலர் முதலீடு செய்ய உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனம் அதானி குழும திட்டத்திற்கு நிதியளிப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி அமெரிக்க அரசு நிறுவனம் ஆசியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடு இதுதான் என்றும் கூறப்படுகிறது.
பிராந்திய கப்பல் திறனை மேம்படுத்தும் திட்டம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி இந்த முயற்சி குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் செயல்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் பிராந்திய கப்பல் திறனை மேம்படுத்தும் இந்த திட்டம் தொடங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் அதானி குழுமம் பெருமிதம் கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் APSEZ (Adani Ports and SEZ Ltd) முழு நேர இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கரண் அதானி, அதானி திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் வளர்ச்சி நிதி நிறுவனமான டிஎஃப்சி நிதியளிப்பதை தாங்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.