அரச ஊழியர்களை அச்சுறுத்தும் ரணில் விக்ரமசிங்க : குற்றம் சாட்டும் மலையக எம்.பி
நுவரெலியா தபால் நிலையம் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படக்கூடாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 1894 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா தபால் நிலையம்
கடந்த 2017 ஆம் ஆண்டில் நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்திருந்ததாக இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அதனை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மீண்டும் அதே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வது தொடர்பான மக்கள் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதன் பின்னர், அது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு எனவும் இங்குள்ள அரச ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க செயல்படக்கூடாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த தபால் நிலையத்தை விற்பனை செய்யும் நடவடிக்கையை எதிர்த்து நாளை நண்பகல் 12 மணிக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.