சர்வாதிகார நிர்வாகத்தை நோக்கி நகரும் இலங்கை : சாலிய பீரிஸ் குற்றச்சாட்டு
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமிங்க தமது அதிகாரங்களை பயன்படுத்தி சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு வாயை மூடிக் கொண்டு அமருங்கள் என ரணில் விக்ரமசிங்க சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இதேபோல, தற்போது சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு எதிராகவும் அவர் செயல்படுவதாக அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மா அதிபர்
சிறிலங்காவின் காவல்துறை மா அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான தீர்மானத்தில் அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை மீறி அதிபர் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டுள்ளதாக சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் ஊடாக, தமது தீர்மானங்களில் அரசியலமைப்பு பேரவை தலையிடக் கூடாதென்பதை ரணில் விக்ரமசிங்க மறைமுகமாக வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கருத்து வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாயை மூடிக் கொண்டு அமருங்கள் என தற்போது ரணில் விக்ரமசிங்க கூறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வாதிகார நிர்வாகம்
சில மாதங்களுக்கு முன் எதிர்க்கட்சியினருக்கு வாயை மூடிக் கொண்டு அமருமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை நினைவூட்டிய சாலிய பீரிஸ், தற்போது குறித்த வார்த்தையை அதிகளவில் பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இந்த நடவடிக்கைகள், இலங்கை சர்வாதிகார நிர்வாகத்தை நோக்கி நகர்வதை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீனா, வட கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் பின்பற்றப்படும் முறைமை விரைவில் இலங்கையிலும் பின்பற்றப்படும் என சாலிய பீரிஸ் மேலும் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.