சஜித்தை அரச தலைவராக்க சிங்கள மக்களுக்கு ஆலோசனை
சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ் (Vadivel Suresh) தெரிவித்துள்ளார்.
மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் இந்தாண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடிவேல் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“அன்று வாக்களித்து இன்று அரசாங்கத்தை விமர்சிக்கும் சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும்.
அவ்வாறு செயற்பட்டு சஜித் பிரேமதாசவை அடுத்த அரச தலைவராக தெரிவுசெய்ய வேண்டும்.
இப்போது தை பிறந்துள்ளது. நிச்சயம் வழி பிறக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுப்பட்டு ஒத்துழைக்க வேண்டும். உங்களுக்கு வலித்தால் எமக்கும் வலிக்கும். இது தொப்புள் கொடி உறவு இதை எவராலும் அசைக்க முடியாது.
வேதனைக்கு மத்தியில் சாதனை படைப்பது தான் இந்த மலையக மக்கள். பெருந்தோட்டக் கம்பனிகாரர்களினால் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என்றார்.