“அனைவரும் நாடு திரும்புங்கள்.. பொது மன்னிப்பு உண்டு!” ஆப்கானின் புதிய பிரதமர் அதிரடி அறிவிப்பு
அனைவரும் நாடு திரும்புங்கள், எல்லோருக்கும் பொது மன்னிப்பு உண்டு என ஆப்கனின் புதிய பிரதமர் முல்லா முகமது ஹசன் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து, 30ஆம் திகதி வரை சுமார் 1.50 லட்சம் பேர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர்.
தலிபான் ஆட்சியின் கெடுபிடிகளுக்கு அஞ்சி ஆப்கன் மக்களும் பெருமளவில் வெளியேறினர். குறிப்பாக அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறினர்.
இந்த நிலையில், ஆப்கனின் புதிய பிரதமர் ஹசன் அகுந்த் தகவல் தெரிவிக்கையில்,
“ஆப்கானிஸ்தானின் முந்தைய அரசில் பணியாற்றி ஊழியர்கள் அனைவரும் தைரியமாக நாடு திரும்பலாம். தூதரகங்களுங்கும், தூதரக அதிகாரிகளுக்கும் முழு பாதுகாப்பை நாங்கள் வாக்குறுதியாக அளிக்கிறோம்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களும், இயக்கங்களும் இங்கே வரலாம். நாங்கள் உலக நாடுகளுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் நட்புறவை பேண விரும்புகிறோம்.
உயிர்ப் பலியும், நிதி இழப்பும் நாங்கள் எங்கள் கடந்த காலங்களில் நிறையவே சந்தித்துவிட்டோம். ஆப்கானிஸ்தானில் ரத்தம் சிந்திய காலமும், படுகொலைகள் நடந்த காலங்களும் முடிந்துவிட்டன.
அதற்கான விலையை நாங்கள் கொடுத்துவிட்டோம். தலிபான் படையினர் இப்போது பண்படுத்தப்பட்டுள்ளனர்.
இங்கே இதுவரை யாரையும் பழிதீர்க்கும் வகையில் படையினர் கொலை செய்யவில்லை. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டப்படி நல்லது நடக்க வேண்டும்.
வெற்றிகள் வாய்க்கப்பெற வேண்டும். நலத்திட்டங்கள் நடைபெற வேண்டும். ஆகையால் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த முயற்சியில், அனைவரும் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.
நீங்கள் அமெரிக்காவுடன் இணக்கமாகப் பணியாற்றியிருந்தாலும் கூட பொது மன்னிப்பு அளிக்கப்படும். அனைவரும் தாயகம் திரும்பவும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.