அமெரிக்க வல்லரசுக்கு தலிபான்கள் கொடுத்துள்ள பேரிடி!
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள அமெரிக்கார்கள் உள்ளிட்ட பலர் தலிபான்களால் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்னும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று தலைநகர் காபூலை தங்கள்வசம் கொண்டுவந்தனர்.
இதனையடுத்து அமெரிக்க மற்றும் மேற்கத்தியப் படைகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். ஆகஸ்ட் 31 ஆம் அமெரிக்காவின் கடைசி படையும் அங்கிருந்து வெளியேறியது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் மஷார் இ ஷெரீஃப் விமான நிலையத்தில் 6 அமெரிக்க விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த விமானங்களை மீண்டும் இயக்க தலிபான்கள் அனுமதி அளிக்காததால் 1000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உள்ளிட்டோர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகமும் அமெரிக்க குடியரசுக் கட்சியினரால் எழுப்பப்பட்டு வருகிறது. ''அமெரிக்கா அவசர கதியில் ஆப்கானில் இருந்து வெளியேறியது.
அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆப்கானில் இருந்து வெளியேறக் காத்திருக்கின்றனர்'' என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்க அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்க செனட்டின் மூத்த உறுப்பினர் மைக் மெக்கால் செய்தியாளர்களிடம் பேசிய போது, மஷார் இ ஷரீஃப் விமான நிலையத்தில் ஆறு விமானங்கள் காத்திருக்கின்றன. அமெரிக்கர்களும், அமெரிக்காவுக்கு பல்வேறு வகையிலும் உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டவரும் அதில் பயணிக்கக் காத்திருக்கின்றனர். ஆனால், தலிபான்கள் விமானத்தை பிணையாக வைத்துக் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகத் தெரிவித்தார்.
இது போல் மற்றொரு குடியரசுக் கட்சி பிரதிநிதி மைக் வால்ட்ஸ் கூறுகையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் என்ஜிஓக்களுடன் இணைந்து ஆப்கானில் உள்ள 6 விமானங்களையும் பத்திரமாக வெளியேறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.