காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையமான பெண்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை இலக்கு வைத்து ஐ.எஸ் ஆயுதாரிகள் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்பதால், மக்கள் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
எனினும் இந்த எச்சரிக்கையையும் மீறி மக்கள் ஒன்று திரண்டிருந்த நிலையில், விமான நிலையத்திற்கு வெளியே தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
விமான நிலையத்தின் அபே கேட் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்கியுள்ளதாக தலிபான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்கொலை குண்டுதாரி ஒருவர் மக்களுக்கு நடுவே சென்று தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், இரண்டாவது தாக்குதல்தாரி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகவிலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இரண்டு குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விளக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.