ஆப்கானில் தலிபான்கள் கோட்டையில் பாரிய தற்கொலைத்தாக்குதல் -பெருமளவானோர் பலி
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலிபான்களின் கோட்டையாக விளங்கும் கந்தகார் நகரில் உள்ள ஷியா பிரிவு பள்ளிவாசலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கண்ணால் கண்ட சாட்சிகளின்படி இந்த தாக்குதலை மூன்று தற்கொலைதாரிகள் நடத்தியதாக ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
ஒருவர் கதவருகே குண்டை வெடிக்க வைத்ததுடன் மற்றைய இருவர் பள்ளிவாசலுக்குள் குண்டை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தொழுகை ஆதலால் பள்ளிவாசல் முழுமையாக வழிபாட்டாளர்களால் நிரம்பியிருந்தது. குறைந்தது 15 அம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக AFP செய்தியாளர் கூறினார்.
தலிபான் சிறப்புப் படைகள் அந்த இடத்தைப் பாதுகாத்துள்ளன மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இரத்த தானம் செய்யுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரமும் வெள்ளிக்கிழமையன்று குந்தூஸ் நகரில் ஷியா பிரிவு பள்ளிவாசல் மீது ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

