பிரான்ஸை சுடுகாடாக மாற்றும் காட்டுத்தீ: ஜனாதிபதியின் அவசர அமைச்சரவை கூட்டம்
தென்மேற்கு நகரமான போர்டோவை நோக்கி காட்டுத்தீ நெருங்கி வருவதன் காரணமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவிருக்கிறார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கூட்டம் இன்று 27.07.2026 நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்டோ நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் காட்டுத்தீ பரவி வருவதாகவும், விரைவில் தாக்கவுள்ள புதிய வெப்ப அலை காரணமாக தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் மேலும் சவாலாக மாறக்கூடும் என்றும் அந்நகரின் மேயர் தொமஸ் கசெனேவ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ
மேலும் சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் போர்டோ நகரை காலி செய்யும் திட்டம் தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் அங்கிருந்த 3,30,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் சில பகுதிகளில் நாளை (28.07.2026) முதல் வெப்பநிலை 40 செல்சியஸ் டிகிரி வரை உயரக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் சுமார் 42,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது என அங்குள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த காட்டுதீயால் நாடு முழுவதும் சுமார் 98,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்துள்ளது.
காட்டுத்தீ காரணமாக பிரான்ஸின் தென்மேற்குப் பகுதிகளில் இருந்து இதுவரை 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |