அனுமதி கிடைத்தால் ஐபிஎல் தொடர் தொடரும் : வெளியான தகவல்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து, அனுமதி கிடைக்குமாயின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு மூன்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது.
இதனையடுத்து, ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் (Operation Bunyun Al Marsoos) என்ற பெயரில், இந்தியா பகுதிகளில் மீது பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது.
ஐபிஎல் போட்டி
பஞ்சாப் தர்மசாலா மைதானத்தில், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் ஐபிஎல் போட்டி நடைபெற்று கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாப் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடாத்தியது.
இதையடுத்து போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். போர் பதற்றம் அதிகரித்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை, ஒரு வாரத்திற்கு ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது ஆரம்பமாகும் என்கின்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்திய அரசாங்கம்
இவ்வாறான பின்னணியில் , ஐபிஎல் தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து, அனுமதி கிடைக்குமாயின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு தென்னிந்தியாவின் மூன்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தொடர் இந்த மாதத்தில் மீண்டும் தொடங்கப்படுமாயின், மீதமுள்ள 16 போட்டிகளையும் பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று இடங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய சூழலில் போட்டிகளை விரைவாக மீண்டும் தொடங்குவதில் சில சிக்கல்கள் உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவிக்கிறது.
போட்டித் தொடர் இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அணிகள் கலைந்து செல்லத் தொடங்கியதுடன், பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இன்றைய தினத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி இடைநிறுத்தம் நீடிக்கப்படுமாயின் வேறு கிரிக்கெட் தொடர்களில் பங்குபற்றும் ஒப்பந்த வீரர்கள் மீண்டும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும் என அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
