மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறத்துடிக்கும் மைத்திரி? சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ மீண்டும் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ( Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் அரச தலைவர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கனவு கண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச தலைவர் பதவியை ஒழித்து விட்டு பொலன்னறுவைக்கு வயலில் உழவு தொழில் செய்யப் போவதாகக் கூறி 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். எனினும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற அவர் தவறினார்.
உயிர்த்த தாக்குதல் சம்பந்தமாக தகவல்கள் கிடைத்திருந்தும், அதனை தடுக்க தவறிய, நாட்டில் இருக்கவில்லை எனக் கூறி தப்பிக்க முயற்சிக்கும் மைத்திரிபால சிறிசேன மீது நாட்டு மக்கள் மீண்டும் நம்பிக்கை வைப்பார்கள் என எதிர்பார்ப்பது கனவு.
மீண்டும் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என நினைப்பது கனவு. இப்படி தோல்வியடைந்த அரசியல்வாதிகளுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த அரசியல் தொடர்பும் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.