தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர்
இலங்கையில் (Sri Lanka)தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கேலமார்ட் (Agnès Callamard) சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்வதோடு சர்வதேச சமூகத்தில் இந்த விடயம் பேசுபொருளாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது குடிசார் சமூகம், ஊடகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தாய்மாரினது கடமை என அவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அக்னஸ் கேலமார்ட் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் கவனம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சர்வதேச நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனை வெளிக்காட்டுவதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம்.
உக்ரைன்-ரஷ்ய போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனம் திரும்பவில்லை. எனது இலங்கைக்கான பயணத்தின் மூலம், தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதை சர்வதேச சமூகத்துக்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க இலங்கை தவறியுள்ளது. மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். இதனால் சர்வதேச சமூகம் இந்த மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிக்காட்டுவதற்கான அர்த்தமுள்ள விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
சிறிலங்கா அரசாங்கம்
மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானங்களை முன்வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அலுவலகம் இலங்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
அறிக்கைகளையும் சமர்ப்பிக்கிறது. பொறுப்புக்கூறலை நோக்கமாக கொண்டு நாம் இந்த அறிக்கைகளை அவதானிக்கிறோம். ஐ.நாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கையின் ஆதரவு மிக முக்கியம்.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவின்றி நீதி மற்றும் சமாதானத்துக்கான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |