அவசரமாக கனடாவுக்குத் திருப்பி விடப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்!
அமெரிக்கா நோக்கிச் சென்ற ஏர் பிரான்ஸ் (Air France) விமானம் கனடாவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் எபோலா (Ebola) வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் காங்கோ ஜனநாயகக் குடியரசைச் (DRC) சேர்ந்த பயணி ஒருவர் தவறுதலாக விமானத்தில் ஏறியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் (Detroit) நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த விமானம், எபோலா பரவல் தொடர்பான புதிய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கனடாவின் மொன்றியால் (Montreal) நகரில் தரையிறக்கப்பட்டது.
பாதுகாப்பு முகமை
இது குறித்து அமெரிக்கக் குடியகல்வு மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை (CBP) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “எபோலா வைரஸ் பரவல் அபாயத்தைக் குறைப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள நுழைவுக் கட்டுப்பாடுகளின்படி அந்தப் பயணி இந்த விமானத்தில் ஏறியிருக்கக் கூடாது.
இதன் காரணமாக சிபிபி (CBP) தீர்க்கமான நடவடிக்கை எடுத்து அந்தப் பயணியைச் சுமந்து வந்த விமானம் டெட்ராய்ட் விமான நிலையத்தில் தரையிறங்குவதைத் தடுத்ததுடன் அதனை கனடாவின் மொன்றியாலுக்குத் திருப்பி விட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) ஆகியவை எபோலா பரவலைத் தடுப்பதற்காக தற்காலிக அவசரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதன்படி, கடந்த 21 நாட்களில் உகாண்டா, காங்கோ அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற அமெரிக்கர் அல்லாத வெளிநாட்டுப் பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி தற்போது எபோலா தொற்றினால் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 139 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |