இஸ்ரேல் - ஈரான் இடையே தொடரும் போர் பதற்றம்.. எயர் இந்தியா எடுத்த அதிரடி முடிவு...!
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் விமானச் சேவை நிறுவனங்கள் ஈரான் வான் பரப்பைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது. எயர் இந்தியா உட்பட மேற்கத்திய விமான நிறுவனங்களான லுப்தான்சா போன்ற பல விமான நிறுவனங்கள் தற்போது புதிய வழித்தடங்களைப் பின்பற்றுகின்றன.
இதன் காரணமாக, இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பயண நேரம் சுமார் ஒரு மணிநேரம் அதிகரித்துள்ளது.
ஏவுகணை தாக்குதல்
ஈரான் வான் பரப்பைத் தவிர்க்கும் வகையில் டெல்லி மற்றும் டெல் அவீவ் இடையேயான நேற்றைய விமான பயணத்தை எயர் இந்தியா இயக்கியுள்ளது. மேலும், வாரத்திற்கு நான்கு முறை இந்த வழித்தடத்தில் சேவையை இயக்குவது குறித்து முக்கிய ஆலோசனையில் எயர் இந்தியா இறங்கியுள்ளது.
2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது இடம்பெற்ற தாக்குதலுக்குப் பிறகு டெல்லி - டெல் அவீவ் விமான சேவையை நிறுத்தியிருந்த எயர் இந்தியா, கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு 2024 மார்ச் 3 ஆம் திகதி மீண்டும் சேவையை ஆரம்பித்தது. ஆனால் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தும் அச்சம் காரணமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்கள் குறித்து எயர் இந்தியா முடிவு செய்யவுள்ளது.
நேற்று (13) அதிகாலை 4.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட எயர் இந்தியா விமானம் 161, ஈரான் வான்பரப்பைத் தவிர்த்து லண்டன் மீதான மாற்று வழித்தடத்தைப் பின்பற்றியது.
இந்த வழித்தட மாற்றத்தால் ஏர் இந்தியாவின் ஐரோப்பிய நகரங்களுக்கான பயண நேரம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், விமான எரிபொருள் செலவும் அதிகரிக்கும். பயணிகள் கூடுதல் நேரம் மற்றும் பணத்தை விமானத்திற்கு செலவழிக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
ஆரம்பப் புள்ளி
எயர் இந்தியாவை போலவே ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனம், மும்பைக்குச் செல்லும் தனது வழக்கமான வழித்தடத்தை மாற்றியுள்ளது. முன்பு கருங்கடல்-ஈரான்-பாகிஸ்தான் வழியாக மும்பைக்குச் சென்று வந்த விமானம், தற்போது கிரீஸ்-மத்தியதரைக்கடல்-சவுதி அரேபியா- பாரசீக வளைகுடா-அரபிக்கடல் வழியாகச் சென்று வருகிறது.
உலகளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் விமான நிறுவனங்களின் இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்ட வான்பரப்புகளின் (no fly zones) எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, வான்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |