ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - அக்மீமன தயாரத்ன தேரர் விடாப்பிடி
வரலாற்று சிறப்புமிக்க பொலநறுவை பராக்கிரம சமுத்திர அணைக்கட்டுக்கு அருகில் யாரோ ஒரு தரப்பின் தனிப்பட்ட நோக்கத்திற்காகவே நடைபாதை ஒன்று அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சிங்கள ராவய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
பராக்கிரம சமுத்திர அணைக்கட்டுக்கு அருகில் ஏதேனும் தனி நபர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இது உருவாக்கப்படுகிறதா என அக்மீமன தயாரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இல்லாவிடின் ஏதேனும் புதையல் தோண்டும் நோக்கில் பணிகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அழிவுக்குள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.