கோட்டாபயவை காப்பாற்றியதே என் வாழ்வில் செய்த மிகப்பெரிய சாதனை: அலி சப்ரி புகழாரம்
கோட்டாபய ராஜபக்ச பிரிவினைவாதத்தை தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய தளபதி என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தனது கருத்தை தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
கேள்வி
கோட்டாபய ராஜபக்ச 2019 அதிபர்த் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவருடைய சட்ட விவகாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் நீங்கள். அப்போது செய்தது தப்பு என்று இப்போது நினைக்கவில்லையா?
இதற்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக இல்லை. ஒரு வழக்கறிஞராக, நான் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது. அது என் கடமை. கோட்டாபய ராஜபக்ச பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தார்.
ஆனால், இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்க அவர் செய்த பணியை புதிதாக வந்துள்ள மக்களுக்கு நினைவில் இல்லை. ஆனால் அது மக்களின் நினைவில் நீங்காத ஒன்று. அவரைப் பாதுகாப்பதை எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்."என்றார்.
பிரிவினைவாதத்தை தோற்கடித்த தளபதி
மேலும், கோட்டாபய ராஜபக்சவை முக்கிய குற்றவாளி என்று அனைவரும் கூறலாம். ஆனால் பிரிவினைவாதத்தை தோற்கடித்து நாட்டை அமைதிக்காக வழி நடத்திய தளபதி அவர் எனவும் அலி சப்ரி புகழ்ந்துள்ளார்.
இந்தநிலையில் அலி சப்ரி தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.