இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கிய சீன உளவுக் கப்பல் விவகாரம்: தற்போதைய நிலைப்பாடு
சீன உளவுக் கப்பலான ஷி யான் 6 ஐ கொழும்பில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதித்துள்ளதா என்ற குழப்பத்தின் மத்தியில், அது தற்போது மலாக்கா நீரிணைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஷி யான் 6 கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் கப்பல்துறைக்கு செல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகின.
எவ்வாறாயினும், இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
80 நாள் ஆய்வுப் பணி
"நேற்று மாலை வரை ஷி யான் 6 க்கு அமைச்சு அனுமதி வழங்கவில்லை" என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா விக்ரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆய்வுக்கான திகதிகள் மற்றும் பிரதேசங்கள் இன்னும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து இந்த உளவுக்கப்பல் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா கவலை
"ஷி யான் 6" 80 நாள் ஆய்வுப் பணியில் ஈடுபடள்ளது, இதன் போது அது இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் வருகையானது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்திற்கு முன்பு, மற்றொரு சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் போர்க்கப்பலான ஹை யாங் 24 ஹாவ் இரண்டு நாள் பயணமாக கொழும்பில் நிறுத்தப்பட்டது.
அதேவேளை, கடந்த ஆண்டு சீனாவின் மற்றொரு உளவுக் கப்பலான யுவான் வாங் 5 இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தபோது இந்தியா தனது கவலையை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.