திலீபனின் நினைவூர்தி பேரணிக்கு யார் அனுமதி கொடுத்தது..! கொந்தளிக்கும் இனவாத எம்.பி
திலீபனின் நினைவூர்தி பேரணி என்பது இனவாதத்தையும் மக்கள் மத்தியில் குரோதத்தையும் ஏற்படுத்தும் சதித்திட்டமாகும் என பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும், இனவாதத்தைக் கக்கும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
நினைவூர்தி பேரணி தொடர்பில் நேற்று(18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர், காடையர்களின் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
யார் அனுமதி கொடுத்தது?
அவர் மேலும் தெரிவிக்கையில், “திலீபன் என்பவர் யார்? நாட்டை பிளவுபடுத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முயற்சிக்கு தலைமை தாங்கியவர்.
பிரிவினைவாதத்தையும் தீவிரவாதத்தையும் நாட்டில் பரப்பும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நோக்கத்திற்காக தமது உயிரை பலி கொடுத்த ஒருவராவார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.
சிவப்பு மஞ்சள் கொடிகளால் வாகனம் ஒன்றை அலங்கரித்து அதில் திலீபனின் பாரிய நிழற்படம் ஒன்றை வைத்துக்கொண்டு கிழக்கில் இருந்து வட மாகாணத்திற்கு வாகனப் பேரணி ஒன்றை மேற்கொள்வதற்கு யார் அனுமதி கொடுத்தது?
எவரேனும் ஒரு உத்தியோகத்தர் அதற்கு அனுமதி வழங்கியிருப்பாராயின் அவர் இலங்கை அரசியலமைப்பின் 157 சரத்தை முழுமையாக மீறி பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிங்கள மக்களின் கிராமங்களுடாக இவர்கள் பயணித்தமை கட்டாயமாக இனவாதத்தையும் மக்கள் மத்தியில் குரோதத்தையும் ஏற்படுத்தும் சதித்திட்டமாகும்.
2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் 3ஆவது சரத்தின் கீழ் இனவாதம், மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி குரோதத்திற்கு வித்திடும் அனைத்து நடவடிக்கைகளும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
அரசாங்கம் உடனடியாக இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரணில் விச்ரமசிங்க ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பங்களில் மாத்திரமே எப்போதும் பிரிவினைவாதிகளும் கடும்போக்கு வாதிகளும் எழுச்சி பெறுகின்றனர்.
அது சரியாக மழை காலத்தில் அட்டைகள் துடிப்பதற்கு நிகரானது.
பேரணிக்கு ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணை இருந்ததா?
இந்தப் பேரணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணை இருந்ததாக இல்லை.
அவரது வலுவற்ற ஆட்சியின் போதே எப்போதும் பயங்கரவாதிகள், கடும்போக்கு வாதிகள் எழுச்சி பெறுகின்றனர்.
புலிப் பயங்கரவாதம் ரணில் விக்ரமசிங்கவின் 2003 - 2004 ஆட்சியிலேயே வலுவடைந்தது. முஸ்லிம் பயங்கரவாதமும் அவரது 2015 - 2019 ஆட்சியிலேயே எழுச்சி பெற்றது.
ஆகவே இந்த நாட்டில் பயங்கரவாதமும் கடும்போக்கு வாதமும் அவரது அதிகரிக்க அவரது வலுவற்ற தன்மையே காரணமாக அமைந்துள்ளது.
தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் பேரணிகளை முன்னெடுக்கும் போது தடை உத்தரவு பெறுகின்ற இந்த அரசாங்கம், பிரிவினைவாதம், பயங்கரவாதம், இனவாதத்தைப் பரப்பும் பாரிய பேரணியை ஏன் தடுக்கவில்லை என நாம் கேள்வி எழுப்புகிறோம்” என்றார்.