நீதியமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறாரா அலி சப்ரி?
நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரே நாடு ஒரே சட்டம் அரச தலைவர் செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறித்து திருப்திக்கொள்ளாத நிலையிலேயே அவர் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியவுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்க நீதி அமைச்சர் தயாராகி வருவதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக ஒரே நாடு ஒரே சட்டம் அரச தலைவர் செயலணி ஸ்தாபிக்கப்படுகின்றமை குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்றும், தனக்கு அறிவிக்காமலேயே இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அலி சப்ரி, பத்திரிகைக்கு அண்மையில் தகவல் வழங்கியிருந்தார்.
நாட்டில் சட்டமொன்றை உருவாக்கும் நிறுவனமொன்று காணப்படுகின்ற நிலையில், இவ்வாறான செயலணி அமைக்கப்பட்டமை தேவையற்ற ஒன்று எனவும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையில், நீதி அமைச்சின் ஆலோசனைகள் இன்றி, இவ்வாறான செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் தனது கவலையையும் அலி சப்ரி வெளியிட்டிருந்த நிலையில், தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்திருக்கிறது.
எவ்வாறாயினும்,, நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி பதவி விலகவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாகவும், அந்த அறிவிப்பை ஊடக அறிக்கையாக வெளியிட அவரது ஊடக பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.